மகாராஷ்டிராவில் நடைமுறையில் இருக்கும் கொரோனா கட்டுப்பாடுகள் மேலும் 15 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் தினசரி தொற்று பாதிப்பு 60 ஆயிரத்தை கடந்துள்ளது. கொரோனாவுக்கு ஒருநாள் பலி எண்ணிக்கை தொல்லாயிரத்தை நெருங்கியுள்ளது. நாள்தோறும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருவதால் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் மாநில அரசு திணறி வருகிறது.
கொரோனா பரவலைத் தடுக்க மகாராஷ்டிரா அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இரவு நேர லாக்டவுன் முதலில் அமல்படுத்தப்பட்டது.
வார விடுமுறை நாட்களில் லாக்டவுன் அமல்படுத்தப்பட்ட நிலையில் கொரோனா பரவல் கட்டுப்படவில்லை. கொரோனாவால் மாநிலத்தின் நிலைமை மோசமாகி வருவதால் கட்டுப்பாடுகளுடன் முழு ஊரடங்கு விதிக்கும்படி அம்மாநில அமைச்சர்கள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவிடம் கோரிக்கை விடுத்தனர். இதனால் அம்மாநிலத்தில் முழு ஊரடங்கு விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் 144 தடை உத்தரவு உட்பட கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. கடந்த 14 ஆம் தேதி இரவு 8 மணிக்கு அமலுக்கு வந்த இந்த கட்டுப்பாடுகள் வரும் மே 1 ஆம் தேதி காலை 7 மணி வரை அமலில் இருக்கம் என அறிவிக்கப்பட்டது.
இந்தநிலையில், அம்மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தலைமையில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், மகாராஷ்டிராவில் நடைமுறையில் இருக்கும் கடும் கட்டுப்பாடுகள் மேலும் 15 நாட்களுக்கு நீட்டிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
மேலும், மகாராஷ்டிராவில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் இலவசமாக தடுப்பூசி போடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.