கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு வருபவர்களுக்கு RTPCR பரிசோதனை செய்த பின்னரே தமிழகத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
கொரோனா பரவல் காரணமாக கர்நாடக மாநிலத்தில் புதன் இரவு முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வந்ததை அடுத்து பல்வேறு பகுதிகளில் பணியாற்றி வந்த தமிழர்கள், தனியார் வாகனங்கள் மூலமாகவும், நடந்தும் சொந்த ஊர் திரும்பி வருகின்றனர். இதனால், இருமாநில எல்லையான ஜூஜூவாடி சோதனைச்சாவடியில் RTPCR பரிசோதனை எடுக்கப்பட்டு வருகிறது. இ-பதிவு செய்தவர்கள் மட்டுமே, தமிழக எல்லைக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டனர். இ-பதிவு இல்லாதவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். தமிழகத்திற்குள் வருபவர்களின் உடல் வெப்பநிலை, பரிசோதிக்கப்படுகிறது. இவர்கள், ஒசூர் பேருந்து நிலையம் செல்லும் வகையில் சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன.
கேரளாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு வரும் பயணிகளுக்கு தொடர்ந்து இரண்டாவது நாளாக RTPCR பரிசோதனை எடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் இருந்து தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் பகுதிக்கு வரும் அனைத்து பயணிகளுக்கும் முந்தல் சோதனைச் சாவடியில் RTPCR பரிசோதனையும், உடல் வெப்பநிலை பரிசோதனையும் எடுக்கப்படுகிறது. RTPCR பரிசோதனை முடிவுகள் வரும் வரை வீட்டை விட்டு வெளியேறக் கூடாது என சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
இதே போல, ஆந்திராவில் இருந்து தமிழகத்துக்கு வரும் அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகிறது. வேலூர் மாவட்டம் தமிழக - ஆந்திரா எல்லைப்பகுதியான கிறிஸ்டியன் பேட்டை பகுதியில், வெளிமாநில வாகனங்களில் வருவோரின் உடல் வெப்பநிலை பரிசோதனையும் வாகனங்களுக்கு கிருமிநாசினி தெளித்த பிறகும் அனுமதிக்கப்படுகின்றன. கொரோனா அறிகுறி இருப்பின் பயணிகள் வாகனங்களுடன் திருப்பி அனுப்பப்படுகின்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூரில், கர்நாடகா கேரள எல்லைப் பகுதியாக உள்ளது. கக்கநள்ளா சோதனை சாவடி மற்றும் முதுமலை வனப்பகுதி வழியாக கர்நாடக செல்லும் சாலைகள் வாகனங்கள் ஏதுமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. இருப்பினும், இருமாநில எல்லையில் பாதுகாப்பு பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.