பிரபல இந்தி நடிகர் சசி கபூர் காலமானார்

சசிகபூர்

by Dibrias, Dec 4, 2017, 19:18 PM IST

பிரபல இந்தி நடிகர் சசி கபூர், உடல் நலக்குறைவு காரணமாக இன்று மாலை 5.30 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 79.

பாலிவுட்டில் 1970- களில் கொடிகட்டி பறந்தவர் சசி கபூர். கொல்கத்தாவில் பிறந்த அவர், 1948ம் ஆண்டு அவரது தந்தை ப்ரித்விராஜ் கபூர் இயக்கிய படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். 1961ம் ஆண்டில் 'தர்மபுத்ரா' என்ற படத்தில் ஹீரோவாக நடித்தார். கிட்டத்தட்ட 150 படங்களில் நடித்துள்ள அவர், 12 ஆங்கிலப்படங்களிலும் நடித்திருக்கிறார். 

சசிகபூர் நடித்த ஷர்மிலி, தீவார் போன்ற படங்கள் சக்கைப் போடு போட்டன. சசிகபூரும் அவரின் மனைவி ஜெனிஃபர் கபூரும் இணைந்து மும்பையில்1978ம் ஆண்டு பிரித்வி தியேட்டரை உருவாக்கினர். 1984ம் ஆண்டு ஜெனிஃபர் புற்றுநோய் காரணமாக மரணம் அடைந்தார். இந்த தம்பதிக்கு சஞ்சனா கபூர் என்ற மகளும் குணால் கபூர்,கரண் கபூர் என்ற இரு மகன்களும் உள்ளனர்.

2014ம் ஆண்டு சசிகபூருக்கு பைபாஸ் சர்ஜரி செய்யப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக அவருக்கு சிறுநீரகப் பிரச்னையும் இருந்தது. சில வாரங்களாக அது தீவிரமடையவே மும்பை கோகிலாபென் மருத்துவமகனையில் ஞாயிற்றுக்கிழமை இரவு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட அவர் மரணம் அடைந்தார். நாளை ( செவ்வாய்க்கிழமை) காலை இறுதிச்சடங்கு நடைபெறுகிறது. சசிகபூரின் மறைவுக்கு பிரதமர் மோடி மற்றும் பாலிவுட் நட்சத்திரங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

 விருதுகள்:

2011ம் ஆண்டு சசிகபூருக்கு பத்ம பூஷன் விருதும் தொடர்ந்து, 2015ம் ஆண்டு இந்திய சினிமாவின் உயரிய விருதான 'தாதா சாகேப் பால்கே ' விருது வழங்கப்பட்டது.

You'r reading பிரபல இந்தி நடிகர் சசி கபூர் காலமானார் Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை