ராஜஸ்தான் இளைஞர் ஒருவர் இந்திய ரயில்வே துறை தரவேண்டிய 35 ரூபாய்க்காக ஒரு வருடம் அலைந்துள்ளார்.
ராஜஸ்தானைச் சேர்ந்தவர் சுஜித் சுவாமி. இவர் ராஜஸ்தானின் கோடா ரயில் நிலையத்திலிருந்து டெல்லி செல்வதற்காக கடந்த ஓர் ஆண்டுக்கு முன்னர் ரயில்வே டிக்கெட் முன் பதிவு செய்துள்ளார். ஆனால், தனது சொந்த காரணத்தால் முன்பதிவு டிக்கெட்டை கேன்சல் செய்துள்ளார்.
இவ்வாறு முன்பதிவு செய்து கேன்சல் செய்தால் ஒரு சிறு தொகை பிடித்தம் போக மீதிப்பணம் பயணிக்கு திரும்ப அளிக்கப்படும். அப்படி திரும்பி அளிக்கப்பட்ட பணத்தில் சுஜித் சுவாமிக்கு 35 ரூபாய் குறைந்துள்ளது. இதுகுறித்து ரயில்வே துறையிடம் விளக்கம் கேட்டார் சுஜித்.
இதற்கு பதிலளித்த ரயில்வே நிர்வாகம் ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையால் திருப்பி அளிக்கப்பட வேண்டிய பணத்தில் மாற்றம் செய்யப்பட்டு சரியான தொகையையே அளித்ததாகக் கூறியது. ஆனால், ஜிஎஸ்டி அமல்படுத்தும் முன்னரே சுஜித் டிக்கெட் கேன்சல் செய்துள்ளார்.
அப்படி கேன்சல் செய்ததற்கான தொகை ஜிஎஸ்டி அமல் ஆனதற்குப் பின்னரே வழங்கப்பட்டுள்ளது. இந்த குழப்படியால் ஒரு ஆண்டாக விளக்க நோட்டீஸ் மேல் நோட்டீஸ் அனுப்பி தகவல் உரிமைச் சட்டத்தில் எல்லாம் கேள்வியும் விளக்கமுமாய் கேட்டு இன்று ஒரு வழியாக அந்த 35 ரூபாய் சுஜித் சுவாமிக்கு திரும்ப வழங்கப்படும் என ரயில்வே அறிவித்துள்ளது.
இதன் பின்னர் தற்போது பலரும் தாங்கள் இழந்த பணத்தை எண்ணியும் இந்த ஜிஎஸ்டி-யால் இந்திய ரயில்வே சம்பாதித்த பணத்தை எண்ணியும் நொந்து வருகின்றனர்.