படித்த இளைஞர்கள் அரசியல்வாதிகள் பின்னால் அலையாமல், சுய தொழில் செய்யுங்கள், இல்லையெனில் பீடா கடையாவது தொடங்கி நடத்துங்கள் என்று திரிபுரா முதல்வர் பிப்லவ் குமார் தேவ் தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
பாஜகவும், சர்ச்சையும் ஒட்டிப்பிறந்த இரட்டை குழந்தைகள் போல். வாரம் ஒருமுறையாவது ஏதாவது பேசி மாட்டிக்கொண்டு சர்ச்சையில் சிக்கிவிடுகிறார்கள். அந்த வரிசையில் இப்போது ஊடகங்களிடம் சிக்கியிருப்பவர் திரிபுரா முதல்வர் பிப்லப் குமார் தேவ்.
சில தினங்களுக்கு முன்னர், “ஐஸ்வர்யா ராய்க்கு உலக அழகிப் பட்டம் கொடுத்தது சரி, ஆனால், டயானா ஹெய்டனுக்கு எதற்காக உலக அழகிப்பட்டம் கொடுத்தார்கள்?” என்று கருத்து தெரிவித்து இருந்தார். அவரின் இந்த பேச்சுக்கு கடும் கண்டனங்கள் எழுந்தன. ஒரு மாநிலத்தை ஆளும் முதல்வருக்கு இதுதான் வேலையா? என்று நெட்டிசன்கள் வருத்தெடுத்தனர்.
இந்நிலையில், நேற்று திரிபுரா கால்நடைத்துறை ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் பங்கேற்று பேசிய பிப்லப் தேவ், “படித்து பட்டம் பெற்ற இளைஞர்கள் அரசாங்க வேலைக்காகக் காத்திருக்காதீர்கள். அரசு வேலை வேண்டும் என்று அரசியல்வாதிகள் பின்னால் அலையாதீர்கள்.
சுய தொழில் தொடங்க முயற்சி செய்யுங்கள். வங்கியில் பிரதம மந்திரி முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் 75 ஆயிரம் ரூபாய் கடன் பெற்று, கால்நடை வளர்ப்புத் தொழிலில் ஈடுபடமுயற்சி செய்யுங்கள். அதன் மூலம் மாதம் 25 ஆயிரம் ரூபாய் வரை வருமானம் ஈட்ட முடியும். இல்லாவிட்டால் வெற்றிலை பீடா கடை தொடங்குங்கள்’ என்று இளைஞர்களுக்கு யோசனை கூறியுள்ளார்.
மேலும், மத்திய அரசு நடத்தும் சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கு சிவில் இன்ஜினீயரிங் படித்தவர்கள்தான் பொருத்தமாக இருப்பார்கள்., மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படித்தவர்கள் ஆட்சிப் பணிக்கு சரி வர மாட்டார்கள். சிவில் இன்ஜினீயரிங் படித்தவர்களுக்குத்தான் சமூகத்தை கட்டமைக்கும் திறன் இருக்கிறது’ என்று தெரிவித்தார்.