பீகார் மாநிலத்தில் வெளியிடப்பட்ட தூய்மை இந்தியா திட்ட விழிப்புணர்வு புத்தகத்தில் பாகிஸ்தானைச் சேர்ந்த சிறுமி ஒருவர் அந்நாட்டுக் கொடியை வரைவது போன்ற படம் இடம்பெற்றிருப்பதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
நாட்டில், பத்து ஆண்டுக் கால ஆட்சியை வீழ்த்தி கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பாஜக ஆட்சியை பிடித்தது. பிரதமர் நரேந்திர மோடி பதவி ஏற்றது முதல் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தார். அதில் ஒன்று, தூய்மை இந்தியா திட்டம். நாடு முழுவதும் தூய்மை இந்தியா திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தி உள்ளது.
இந்நிலையில், தூய்மை இந்தியா திட்டம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக பீகார் மாநிலம் ஜமுய் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர்களுக்கு 5000 புத்தகங்கள் வழங்கப்பட்டன.
இந்த புத்தகத்தில், பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த சிறுமி அந்நாட்டு கொடியை வரைவது போன்ற படம் இடம்பெற்றுள்ளது. இந்த விவகாரம் புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து, ஜமுய் மாவட்டத்தின் சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர், இது தவறுதலாக அச்சடிக்கப்பட்டுள்ளது என்று கூறினார். மேலும், பாகிஸ்தானில் கல்வி விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக யுனிசெப் அமைப்பு பயன்படுத்திய படம் இது.
மாவட்ட நிர்வாகம் ஒப்புதல் வழங்கிய பிறகே அச்சிடப்பட்டது என்று அச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக முறையான விசாரணை நடத்த மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை அடுத்து, அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.