நாளை அதிகாலை நான்கு மணியிலிருந்து இந்தியத் தலைநகர் டெல்லியில் மழையும் புயலும் வெளுத்து வாங்கும் என வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் மழைக்காலம் நெருங்கி வருவதையடுத்து நாட்டின் வடமாநிலங்களுக்கு கடும் மழை மற்றும் புயல் எச்சரிக்கை விடுத்துள்ளது அகில இந்திய வானிலை ஆய்வு மையம். கடந்த வாரம் உத்தரப்பிரதேசத்தை புழுதிப்புயல் சுழற்றி அடித்ததைத் தொடர்ந்து டெல்லியில் நிவாரணப் பணிகளும் பாதுகாப்பு குழுக்களும் முடுக்கிவிடப்பட்டுள்ளது.
தலைநகர் டெல்லி மட்டுமல்லாது பீகார், மேற்கு வங்களாம், சிக்கிம், ஒடிசா, அசாம், மேகாலயா, நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம், திரிபுரா, கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களுக்கு கடும் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது என்று நேற்று மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்நிலையில் நாளை அதிகாலையிலிருந்து மே 9-ம் தேதி வரை மக்கள் யாரும் வெளியில் வரவேண்டாம் என்றும் பாதுகாப்பு உபகரணங்களுடன் தயராக இருக்க வேண்டும் என்றும் டெல்லி மக்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கோரிக்கைவிடுத்துள்ளது.
இம்முறை டெல்லியில் புயல் மணிக்கு 70 கிமீ வேகத்தில் தாக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. டெல்லியைத் தொடர்ந்து வடகிழக்கு மாநிலங்களில் எச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.