தாஜ்மஹாலின் அழகே சீர்கெட்டுவிட்டது என தொல்லியல் துறையின் அலட்சியத்தை உச்ச நீதிமன்றம் கடிந்துகொண்டுள்ளது.
உலக காதலர்களின் சின்னமாகக் கருதப்படும் தாஜ்மஹால், தற்போது சுற்றுச்சூழல் சீர்கேட்டின் சின்னமாகி நிற்கிறது. கண்ணைக்கவரும் இந்த பளிங்கு கல் மஹால் தற்போது பழுப்பு நிறமேறி தனது சுய அழகையே இழந்து நிற்கிறது.
யுனெஸ்கோவின் உலகப் பாரம்பர்ய சின்னங்களில் ஒன்றான தாஜ்மஹாலை ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மக்கள் சுற்றுலாப் பயணிகளாக வந்து பார்வையிட்டுச் செல்கின்றனர். இத்தனைப் பெருமைமிகு அடையாளம், இன்று தன் அடையாளத்தை தொலைத்துவிட்டு நிற்பதற்கான காரணம் மாசடைந்த சுற்றுச்சூழல்.
இதுகுறித்து உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த வழக்கில், ‘தாஜ்மாஹாலின் நிறம் மங்கியதற்கு பாசிகளே காரணம்’ என இந்தியத் தொல்லியல் துறை காரணம் சொல்லியது. இதைக் கேட்ட உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகள் லோகுர் மற்றும் தீபக் குப்தா ஆகியோர் கொண்ட அமர்வு தொல்லியல் துறையை கடிந்துகொண்டது.
மேலும் உச்ச நீதிமன்றம் கூறுகையில், “பாசி பறந்து சென்றா தாஜ்மஹாலின் சுவரில் பழுப்பேறி நிற்கிறது? பாதுகாக்கத்தான் தொல்லியல் துறை உள்ளது. ஆனால், வீண் காரணங்கள் சொல்லப்படுகின்றன. ஒன்று தகுதியான யாரும் தொல்லியல் துறையில் இல்லை. இல்லையென்றால் எல்லாத் தகுதியும் இருந்தும் அதைப் பயன்படுத்தாமல் உள்ளீர்கள்” என்று தொல்லியல் துறையையே கடிந்துகொண்டுள்ளது.