புதுடெல்லி: ரயில்வே துறை சார்பில் நாடு முழுவதும் அனைத்து தரப்பு மக்களும் பயணிக்கும் வகையில் ரயில்கள் அறிமுகம் செய்து வருகின்றன. பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் முதல் பொருளாதாரத்தில் பெரிதும் வளர்ந்தவர்கள் வரை ரயில்களில் பயணிக்கின்றனர். இதனால், பயணிகளுக்காக அனைத்து வசதிகளும் ரயில்களில் செய்யப்படுகின்றன.
ஆனால், ரயிலில் பயணிக்கும் சிலர் ரயில்வேக்கு சொந்தமான பொருட்களை திருடி செல்கின்றன. குறிப்பாக கடந்த ஆண்டு மட்டும் இந்தியா முழுவதும் ரயில்வேக்கு சொந்தமான பொருட்களை திருடியதாக சுமார் 11 லட்சம் நபர்களை ரயில்வேத் துறை போலீசார் கைது செய்துள்ளநனர். இதில், மகாராஷ்டிராவில் மட்டும் 2.23 லட்சம் பேரை கைது செய்துள்ளதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது. இதனால், ரயில்களில் திருடுவதில் மகாராஷ்டிரா முதல் இடத்தை பிடித்துள்ளது. மகாராஷ்டிராவை தொடர்ந்து உத்தர பிரதேசம் மாநிலம் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. இங்கு மட்டும் 1.22 லட்சம் பேரை ரயல்வே போலீசார் கைது செய்துள்ளனர். தொடர்ந்து, மத்திய பிரதேசம்-98,594, தமிழகம்-81,408, குஜராத்-77,047 என அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளது.
இதுகுறித்து ரயில்வே துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: ரயில்களில் பொருத்தப்பட்டுள்ள பிரிமீயம் குவாலிட்டி கொண்ட இரும்பு மற்றும் தாமிரம் அடங்கிய பொருட்கள் தான் திருடர்களின் இலக்காக உள்ளது. அது மட்டுமல்லாமல், ஏசி வகுப்பு பெட்டிகளின் போர்வைகள், மின்சார விளக்குகள், மின்விசிறிகளையும் திருடி சென்றுவிடுகிறார்கள். மின்சார ரயில்களில் மின்சாரத்தை தடைசெய்து அதன் வயர்களை திருடி செல்கின்றனர். இந்த வயர்கள் வெளி மார்கெட்டுகளில் நல்ல விலைக்கு விற்றுவிடுகின்றனர். இதனால், திருட்டு சம்பவங்களை கட்டுப்படுத்துவதற்காக இரும்புக்கு பதிலாக பைபர் பிளாக்குகள் பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும், திருட்டு சம்பவங்களை குறைப்பதற்கான பணிகளை ரயில்வே துறை செய்து வருகிறது.
இவ்வாறு அதிகாரி கூறினார்.