இந்தியா - இலங்கை இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 1-0 என்ற விகிதத்தில் கைப்பற்றியது.
இந்த தொடரை வென்றதன் மூலம், தொடர்ச்சியாக 9 தொடர்களை கைப்பற்றி, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்தின் முந்தைய சாதனையை இந்தியா சமன் செய்துள்ளது.
2015-ம் ஆண்டு இலங்கைக்கு எதிரான போட்டியில், இந்த சாதனைவெற்றி தொடங்கியது. தற்போதும் இலங்கைக்கு எதிரான தொடரை வென்றதன் மூலம் பத்தாவது வெற்றிக்கான ஓட்டத்தில் தன் இருப்பை இந்தியா தக்க வைத்துள்ளது.
இலங்கைக்கு எதிரான 3 போட்டிகளில் 5 இன்னிங்சில் விளையாடிய விராட் கோலி மொத்தமாக 610 ரன்கள் குவித்துள்ளார், இதில் 2 இரட்டை சதங்கள், ஒரு சதம் மற்றும் ஒரு அரைசதம் அடங்கும்.
இதன்மூலம் டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசையில் 5வது இடத்தில் இருந்த விராட் கோலி 3 இடங்கள் முன்னேறி தற்போது 893 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளார். ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 938 புள்ளிகளுடன் தொடர்ந்து முதல் இடத்தில் நீடிக்கிறார்.
மேலும், கேப்டனாக ஒரே ஆண்டில் அதிக வெற்றிகளை பெற்றவர் என்ற சாதனையை ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் உடன் விராட் கோலி பகிர்ந்து கொண்டுள்ளார். 2005-ம் ஆண்டில் 31 வெற்றிகளை பாண்டிங் குவித்ததே இதுநாள் வரையில் சாதனையாக இருந்தது, தற்போது கோலியும் இந்த ஆண்டில் 31 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார்.
அடுத்த மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஜனவரி 5-ம் தேதி முதல் தென் ஆப்பிரிக்க மண்ணில் நடைபெற உள்ளது என்பதால், இலங்கைக்கு எதிரான ஒருநாள் மற்றும் 20-20 போட்டிகளிலிருந்து கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.
மேலும், தென் ஆப்பிரிக்க தொடரை கருத்தில் கொண்டு, இலங்கைக்கு எதிரான 20-20 போட்டிகளில் ரோஹித் சர்மா தவிர முன்னணி வீரர்கள் அனைவருக்கும் ஓய்வு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து பத்து தொடர்களை வென்று புதிய உலக சாதனை படைப்பதற்காக இந்திய அணி தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறது. ஆனால், இந்தியா இதுவரை தென் ஆப்பிரிக்க மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரைகூட வென்றதில்லை. இதனை மனதில் வைத்து சுதாரிப்புடன் செயல்பட்டால், கோலி தலைமையிலான இந்திய அணி, கடந்த கால கசப்பான வரலாற்று சுவடுகளை தவிடுபொடியாக்கி, ஒரே தொடரில் இரண்டு சாதனைகளுடன் சரித்திரத்தில் இடம் பெறுவார்கள் என ஆவலுடன் எதிர்பார்ப்போம்.