குமாரசாமியின் ஆட்சி தொடருமா.. முதலமைச்சராக நீடிப்பாரா?

நாளை மெஜாரிட்டியை நிரூபிக்கிறார் குமாரசாமி

by Suresh, May 24, 2018, 10:31 AM IST

முதலமைச்சர் பொறுப்பு ஏற்றுள்ள குமாரசாமி, கர்நாடக சட்டசபையில் வெள்ளிக்கிழமை (நாளை) மெஜாரிட்டியை நிரூபிக்கவுள்ளார். முன்னதாக சட்ட மன்ற சபாநாயகராக ரமேஷ் குமார் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக சட்டமன்றத்திற்கு கடந்த 12-ஆம் தேதி தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 15-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

இதில், எந்த கட்சிக்கும் தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை. அதாவது அதிகபட்சமாக பாஜக 104 இடங்களை கைப்பற்றியது. காங்கிரஸ் 78 இடங்களையும், ஜனதாதளம் (எஸ்) கூட்டணி 38 இடங்களையும், சுயேச்சைகள் 2 பேரும் வெற்றி பெற்றனர்.

இதையடுத்து, பாஜக ஆட்சி அமைக்க உரிமை கோரியது. அதேப் போல் காங்கிரஸ் ஆதரவுடன், ஜனதாதளம் (எஸ்) கட்சியும் ஆட்சி அமைக்க ஆளுநரிடம் உரிமை கோரியது. இந்த கூட்டணிக்கு 2 சுயேச்சைகளும் ஆதரவு தெரிவித்தனர். இதனால் இக்கூட்டணியின் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 118 ஆக உள்ளது.

இந்நிலையில், பாஜக ஆட்சி அமைக்க ஆளுநர் வஜூபாய் வாலா அழைப்புவிடுத்தார். அதன்படி அக்கட்சியின் மாநில தலைவரான எடியூரப்பா கடந்த 17-ஆம் தேதி முதலமைச்சராக பதவி ஏற்றார். எடியூரப்பா மெஜாரிட்டியை நிரூபிக்க ஆளுநர் 15 நாள் அவகாசம் வழங்கினார். ஆனால் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி கடந்த 19-ஆம் தேதி சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. பெரும்பான்மையை நிரூபிக்க பாஜகவுக்கு 111 பேரின் ஆதரவு தேவைப்பட்டது. இதனால் அக்கட்சி காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சி எம்.எல்.ஏ.க்களை தங்கள் பக்கம் இழுக்க குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இந்த நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்னதாக எடியூரப்பா தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அதைதொடர்ந்து காங்கிரஸ்-ஜனதாதளம் (எஸ்) கூட்டணி சார்பில் குமாரசாமியை ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பு விடுத்தார். இதைதொடர்ந்து அவர் முதலமைச்சராக நேற்று பதவி ஏற்றுக்கொண்டார். இதனையடுத்து குமாரசாமி சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபிக்க ஆளுநர் 15 நாள் அவகாசம் வழங்கினார். இந்நிலையில் நாளை குமாரசாமி தமது அரசின் மெஜாரிட்டியை நிரூபிக்கவுள்ளார். அதன் பின்னரே குமாரசாமி தலைமையிலான ஆட்சி கர்நாடகாவில் நீடிக்குமா என்பது உறுதியாகும்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading குமாரசாமியின் ஆட்சி தொடருமா.. முதலமைச்சராக நீடிப்பாரா? Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை