டெல்லி வாசிகள் இனி அரசு அலுவலகங்களில் கால் கடக்க நிக்க வேண்டிய அவசியம் இல்லை. 40 விதமான அரசு சேவைகள் வீடு தேடி வருகிறது. இந்த புதிய திட்டத்தை டெல்லி முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால் அறிமுகம் செய்ய இருக்கிறார்.
டெல்லியில், அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு ஆட்சியை பிடித்தது முதல் அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. அதில், ஒன்று பள்ளிகளை சீர்படுத்தியது. இதன் மூலம், தேர்ச்சி விகிதத்தை அதிகரித்து சாதனை படைத்தது.
இதேபோல், தனியார் மருத்துவமனைகளுக்கு விதிமுறைகள் அதிரடியாக திருத்தப்பட்டன. அந்த வகையில், பொது மக்கள் சந்தித்து வரும் சிரமங்களை குறைக்க சுமார் 40 வகையான சேவைகளை வீட்டிற்கே வரும் திட்டம் அறிமுகப்படுத்தபடுகிறது.
இத்திட்டத்தின் கீழ்ல பிறப்பு, இறப்பு, பென்சன், வருவாய், சாதி உள்ளிட்ட சான்றிதழ்களை வீட்டிற்கே வந்து அரசு அதிகாரிகள் வழங்குவார்கள். இதைதவிர, ஓட்டுனர் உரிமம், வாகன பதிவு மாற்றம் செய்தல், திருமண சான்றிதழ், குடிநீர், கழிவுநீர் இணைப்பு ஆகிய 40 வகையான அரசு சேவைகள் வீடு தேடி வந்து செயல்படுத்தப்பட உள்ளது
இதற்கு, இணையதளத்தில் விண்ணப்பித்தால் போதும். இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்காக நவீன வசதிகளை கொண்ட 300 குழுக்கள் அமைக்கப்பட உள்ளன. இவர்கள், வீட்டிற்கே வந்து புகைப்படும் எடுப்பது, கைரேகை பெறுவது, ஆவணங்களை வீட்டிற்கே வந்து பெறுவது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும்.
இத்திட்டம், இம்மாதம் இறுதிக்குள் நடைமுறைக்கு வரும் என ஆம் ஆத்மி அரசு தெரிவித்துள்ளது.