கேரளாவில் பரவி வரும் நிபா வைரஸ் காரணமாக இதுவரை 16 பேர் இறந்துள்ளனர்.
கடைசி இரண்டு நாட்களில் மட்டும் இருவர் இறந்துள்ளது நிபா வைரஸ் குறித்த அச்சத்தை மேலும் அதிகரித்துள்ளது. இது குறித்து கேரள சுகாதாரத் துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா, `நிபா வைரஸ் மீண்டும் பரவ வாய்ப்புள்ளது.
இதுவரை நிபா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுடன் நேரடி தொடர்பில் இருந்தவர்களுக்குத் தான் இந்த வைரஸ் தொற்று இருக்கும். எனவே, அப்படிப்பட்டவர்களை இனம் கண்டு, தீவிரமாக கவனித்து வருகிறோம். நிபா வைரஸ் மூலம் பாதிக்கப்பட்டிருக்கக் கூடும் என்று சந்தேகப்படுபவர்களை சோதனை செய்துள்ளோம். முறையான முடிவு வரும் வரை காத்திருக்கிறோம்.
கண்காணிப்பாளருடன் நெருக்கமாக இருந்த நபர்களை உற்று கவனித்து வருகிறது அரசு. வெயில் காலம் முடிந்த இன்று முதல் கேரளாவில் பள்ளிகள் திறக்கின்றன. ஆனால், கோழிக்கோடு மாவட்டத்தில் வரும் 5 ஆம் தேதி தான் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இதுவரை நிபா வைரஸ் இருக்கலாம் என்று சந்தேகப்பட்டு 196 பேர்களை சோதனை செய்துள்ளனர்.
அதில் 18 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது. 11 பேருக்கு வைரஸ் பாதிப்பு அறிகுறி தென்படுகிறது. 1,500 பேருக்கு இந்த வைரஸ் தாக்கம் ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. நிபா வைரஸ் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் முடுக்கி விடப் பட்டுள்ளதாகவும், மக்கள் தேவையில்லாமல் பீதியடைய வேண்டாம் என்றும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.