உலக கால்பந்து கோப்பை தொடர் இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ள நிலையில், பல நாட்டு வீரர்கள் தீவிரமாக பயிற்சி எடுத்து வருகின்றனர்.
இதில் இங்கிலாந்து கால்பந்து அணி, சற்று மாறுபட்ட முறையில் பயிற்சி செய்து வருகிறது. 2018 ஆம் ஆண்டுக்கான ஃபிபா கால்பந்து உலக கோப்பை தொடர், ரஷ்யாவில் நடக்க இருக்கிறது.
தென் அமெரிக்க நாடுகள், ஐரோப்பிய நாடுகள் என பலர் இந்த முறை உலக கோப்பையைத் தங்கள் வசமாக்க தீவிரமாக பயிற்சி எடுத்து வருகின்றனர். ஆனால், அதீத பயிற்சியும் சில நேரங்களில் எதிராக திரும்பி விடும். இதனால், தொழில் முறையிலான விளையாட்டு வீரர்கள் தங்களை தயார்படுத்திக் கொள்ள பல புதிய உத்திகளை கையாள்வர்.
இந்திய கிரிக்கெட் அணியை எடுத்துக் கொண்டால், கிரிக்கெட் பயிற்சிக்கு மத்தியில் சிறிது நேரம் கால்பந்து விளையாடுவர். அப்போது அவர்கள் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்த மாட்டனர். மாறாக, செம ரகளையாக ஒருவரை ஒருவர் இழுத்து, தள்ளி சிரிப்புடன் விளையாடுவர்.
இது அவர்களை கேம் டென்ஷனில் இருந்து விடுபட வைக்கும். இப்படி, விளையாட்டு வீரர்கள் பல உத்திகளை கையாண்டு தங்களை தயார் படுத்திக் கொள்வர். அதுபோல, இங்கிலாந்து கால்பந்து அணியும் ஒரு உத்தியை கையாண்டுள்ளது.
அந்நாட்டு கால்பந்து அணி வீரர்கள் அனைவரும், இரண்டு அணிகளாக பிரிந்து கபடி விளையாடி தங்களை ஆசுவாசப்படுத்திக் கொண்டுள்ளனர். அவர்கள் கபடி விளையாடுவதை வீடியோவாக எடுத்து வெளியிட்டு உள்ளனர். இது இணையத்தில் வைரலாகி வருகிறது.