2019 நாடாளுமன்ற தேர்தலுக்காக பிரதமர் நரேந்திர மோடி தனது அதிரடி அஸ்திரங்களைப் பயன்படுத்தத் தயாராகி உள்ளார்.
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் சில நாட்களுக்கு முன்னர் நடந்த 10 நாடாளுமன்ற இடைத்தேர்தல்களுக்குப் பின்னர் மோடி-அமித்ஷா கூட்டணி வீழ்த்தக்கூடியவை தான் என்ற எண்ணம் எதிர்க்கட்சிகள் மத்தியில் பிரபலமாகியுள்ளது.
எனவே, சரிந்து வரும் தன் புகழ்ச்சியைத் தக்கவைத்துக் கொள்ள ஒரு புதிய திட்டத்தை மோடி அறிமுகப்படுத்த உள்ளதாகத் தகவல் வந்துள்ளது. அதாவது, நாட்டில் இருக்கும் 50 கோடி பேருக்கு ஓய்வூதியம், வாழ்க்கை காப்பீடு மற்றும் கர்ப்பகாலத்துக்கான நிதி ஆகியவற்றை கொடுக்கும் வகையிலான திட்டத்தை மோடி சீக்கிரமே அமல்படுத்துவார் என்று கூறப்படுகிறது.
குறிப்பாக, வேலை செய்யும் அடித்தட்டு மக்களுக்கு இந்தத் திட்டத்தின் பயனாளர்களாக இருப்பர் என்று கூறப்படுகிறது. அமைப்புசாராத தொழில்லாளர்களுக்கு இந்தத் திட்டத்தின் பயன் பெரிதாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
இந்த ஆண்டு பிப்ரவரி மாதம், மோடிகேர் என்ற பெயரில் ஒரு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தின் மூலம் ஏறக்குறைய 10 கோடி பேருக்கு சுகாதார காப்பீடு அளிக்கப்படும் என்று அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், 50 கோடி பேர் பயன் பெறும் வகையில் அடுத்தத் திட்டமும் அமல்படுத்தப்பட உள்ளதாம். ஆனால், இந்தத் திட்டத்தில் ஒரு ஓட்டை இருக்கிறது. அது தான் நேரம். ஆமாம், இன்னும் ஒரே ஆண்டில் மக்களவைத் தேர்தல் வரப் போகிறது. அதற்கு முன்னரே இந்தத் திட்டத்தை அமல்படுத்த முடியாது என்பது தான் பெரும்பாலான பொருளாதார வல்லுநர்களின் கருத்தாக இருக்கிறது.