ஆந்திர பிரதேச மாநிலம் விசாகப்பட்டினம் அருகே சாலை வசதி இல்லாத காரணத்தால் கர்ப்பிணி பெண்ணை கிராம மக்கள் சுமந்து செல்ல வேண்டிய அவலநிலை ஏற்பட்டது.
அங்குள்ள அங்கூ கிராமத்தில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. கர்ப்பிணி பெண் ஒருவருக்கு திடீரென பிரசவவலி ஏற்பட்டது. இதை அடுத்து அங்கூ கிராம மக்கள் கர்ப்பிணியை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸ்க்கு போன் செய்தனர்.
ஆனால், அந்தக் கிராமத்தில் இருந்து முக்கிய சாலைக்கு வருவதற்கு சுமார் 6 கிலோமீட்டர் வரை சாலை வசதி இல்லை என்பதால் வர முடியாது என்று ஆம்புலன்ஸ் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆம்புலன்ஸ் வரமுடியாது என்று கூறியதை அடுத்து, 6 கிலோமீட்டர் தூரம் கிராம மக்கள் மற்றும் உறவினர்களே அந்தக் கர்ப்பிணி பெண்ணை சுமந்து சென்றனர். குழந்தைக்கு தொட்டில் கட்டுவது போல், மூங்கில் கட்டையில் போர்வையை கட்டி தோளில் சுமந்து சென்றனர்.
சுகாதாரத்துறையில் ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட தொழில்நுட்ப வளர்ச்சி அதிகரித்துள்ள, இந்த காலக்கட்டத்தில் கூட, நாட்டில் இன்னும் சில இடங்கள் ‘அங்கூ’ கிராமத்தை போல் தான் இருக்கின்றன என்பது வேதனை தரும் செய்தியாகும்.