எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளுக்கு நீட் கட்டாயம் என்று நாடு முழுவதும் சென்ற ஆண்டிலிருந்து நடைமுறை கொண்டுவரப்பட்டது.
இதையடுத்து, நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே மருத்துவக் கல்வி படிக்கும் முடியும் என்ற நிலை உள்ளது. இந்நிலையில் 2018 ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு நடந்து முடிந்து கடந்த 4 ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
இதில் பிகாரைச் சேர்ந்த மாணவி கல்பனா குமாரி அதிக மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தைப் பிடித்தார். மேலும் பொதுப் பிரிவினருக்கு இந்த ஆண்டு கட்-ஆஃப் மதிப்பெண் 119 ஆகவும், பொதுப் பிரிவில் மாற்றுத் திறனாளிகளுக்கு 107 மதிப்பெண்களும், மற்றவர்களுக்கு 96 மதிப்பெண்களும் என்று நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதன்படி நீட் எழுதிய மாணவர்களில் 6,34,897 பேர் நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்கள் என்று சி.பி.எஸ்.இ அறிவித்துள்ளது.
மருத்துவப் படிப்பைப் பொறுத்தவரை அனைத்திந்திய அளவில் 15 சதவிகித இடங்களுக்கான கவுன்சிலிங் முதலில் நடக்கும். மெடிக்கல் கவுன்சிலிங் கமிட்டியான எம்.சி.சி-யின் தளத்தில் இந்த இடங்களில் தேர்வாக விருப்பப்படும் மாணவர்கள் வரும் 19 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பித்திருக்க வேண்டும். இதையடுத்து இம்மாதம் 20 மற்றும் 21 தேதிகளில் இடங்களை ஒதுக்கும் எம்.சி.சி. 22 ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும்
அதேபோல இரண்டாவது சுற்று கவுன்சிலிங்கிற்கு ஜூலை 6 முதல் 8 ஆம் தேதிக்குள் மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். தொடர்ந்து அடுத்த மாதம் 10 மற்றும் 11 ஆம் தேதிகளில் இடங்கள் ஒதுக்கப்படும்.