கிரிக்கெட் வீரர் விரேந்தர் சேவாக், வயதான பெண் டைப்பிஸ்ட் வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டு, அவரை ‘சூப்பர் விமன்’ என பாராட்டியுள்ளார்.
மத்தியப்பிரதேச மாநிலம் செஹோர் மாவட்டத்தை சேர்ந்தவர் லட்சுமி பாய். 72-வயதான இந்த மூதாட்டி செஹோர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், ஆவணங்கள், மனுக்கள் தட்டச்சு செய்து தருகிறார்.
அதி வேகமாக அவர் டைப்பிங் செய்வதை பார்த்த கிரிக்கெட் வீரர் விரேந்தர் சேவாக், லட்சுமி பாயை படம் பிடித்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். ‘சூப்பர் விமன்’ எனவும் மூதாட்டியை அவர் பாராட்டியுள்ளார்.
“கற்பதற்கும், பணிபுரிவதற்கும் வயது ஒரு தடையில்லை என பணிபுரியும் லட்சுமி பாயிடம், இளைஞர்கள் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும்” என கருத்து பதிவிட்டுள்ளார்.
இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. இது குறித்து லட்சுமி பாயிடம் கேட்ட போது, “நான் ஒன்றும் பிச்சைக்காரி இல்லை. எனக்கு கிடைத்த வேலை மூலம் குடும்பத்தை காப்பாற்றி வருகிறேன். வங்கியில் வாங்கிய கடனை கட்ட முடியாமல் தவிக்கும் எனக்கு யாரேனும் உதவி செய்ய வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
வயிற்று பிழைப்புக்காக பிச்சை எடுப்போர் மத்தியில், தள்ளாடு வயதிலும் மன உறுதியோடு உழைக்கும் லட்சுமி பாய், அனைவருக்கும் ஒரு நம்பிக்கை நட்சத்திரம்தான்.