மகாராஷ்டிராவில் செல்ஃபி எடுக்க முயன்ற பெண் ஒருவர் 500 அடி பள்ளத்தாக்கில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
டெல்லியைச் சேர்ந்த 33 வயது பெண், சரிதா ராம்மகேஷ் சௌகான். அவர், தன் கணவர் மற்றும் 3 குழந்தைகளுடன் மகாராஷ்டிராவின் ரய்காத் மாவட்டத்தில் இருக்கும் மேத்ரான் மலைக்கு சுற்றுலா நிமித்தமாக வந்துள்ளார். குடும்பத்துடன் நேற்று மாலை 6:30 மணி அளவில் மேத்ரான் மலை உச்சிக்கு சென்றுள்ளார் சரிதா.
அப்போது, குடும்ப உறுப்பினர்கள், பல இடங்களில் நின்று செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்தனர். சரிதாவும், மலையின் உச்சி எல்லைக்குச் சென்று செல்ஃபி எடுக்க முயன்றுள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக 500 அடி பள்ளத்தாக்கில் விழுந்துள்ளார் சரிதா. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் உள்ளூர் போலீஸுக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.
இதையடுத்து அவரை மீட்கும் பணியை உள்ளூர் மக்களை வைத்து ஆரம்பித்தது போலீஸ். சரிதாவின் உடலை நள்ளிரவுதான் போலீஸ் கண்டெடுத்தனர். பின்னர், பிரேத பரிசோதனைக்கு அவரது உடல் எடுத்துச் செல்லப்பட்டது. பிரேத பரிசோதனை முடிவடைந்ததை அடுத்து, சரிதாவின் உடல் அவரின் குடும்பத்தினரிடம் கொடுக்கப்பட்டது.
வாஷிங்டன் போஸ்ட் ஊடக நிறுவனம் சமீபத்தில் ஒரு ஆய்வு முடிவு வெளியிட்டது. அதில், ‘உலக அளவில் செல்ஃபி எடுக்கும் போது நடக்கும் விபத்துகளில் இரண்டில் ஒன்று இந்தியாவில் தான் நடக்கிறது’ என்னும் திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளது.