நீலகிரி மாவட்டத்தின் கூனூரில் உள்ள சப்-ஜெயிலில் இருந்த 3 கைதிகள் தப்பித்து உடனே வசமாக சிக்கியுள்ளனர்.
ஆனால், கைதிகள் தப்பித்த இரண்டு மணி நேரத்திலேயே போலீஸ் கையில் பிடிபட்டுள்ளனர். தேனியைச் சேர்ந்த சகோதரர்களான கிருஷ்ணன் மற்றும் குமார், கூனூரைச் சேர்ந்த அரவிந்த் ஆகியோர் திருட்டில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு சில நாட்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களை கூனூரில் உள்ள சப்-ஜெயிலில் வைத்து விசாரித்து வந்தது போலீஸ். இந்நிலையில், சிறையில் இருக்கும் சுவரில் ஓட்டைபோட்டு மூன்று பேரும் தப்பித்துள்ளனர். அவர்களை நீலகிரி மாவட்டத்தின் எல்லையைத் தாண்டிவிடக் கூடாது என்பதற்காக, எல்லையோர காவலர்கள் உஷார் படுத்தப்பட்டனர்.
தொடர்ந்து அவர்களை தேடும் பணிகளை முடுக்கிவிட்டனர் போலீஸ். இதையடுத்து, அவர்கள் அருகில் இருக்கும் ஒரு டீ எஸ்டேட்டில் பதுங்கி இருப்பதாக போலீஸுக்குத் தகவல் வந்துள்ளது. இதையடுத்து, சம்பவ இடத்துக்கு போலீஸ் விரைந்து, கைதிகளை சுற்றி வளைத்தனர்.
ஆனால், அவர்கள் உடனடியாக சரணடையாமல் காவலர்கள் மீது கற்களை வீசியுள்ளனர். இதனால், சில போலீஸாருக்குக் காயம் ஏற்பட்டதாகவும் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. சிறிய போராட்டத்துக்குப் பிறகு கைதிகள் மூவரையும் போலீஸ் பிடித்து மீண்டும் சிறையில் அடைத்துள்ளது.