நிரவ் மோடிக்கு எதிரான வரி ஏய்ப்பு வழக்கில் குஜராத் நீதிமன்றம் பிறப்பித்த கைது வாரண்டை இ-மெயில் மூலம் வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் அனுப்பி வைத்தனர்.
பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி, பஞ்சாப் நேஷனல் வங்கி மூலம் சுமார் ரூ.13 ஆயிரம் கோடி கடன் பெற்று மோசடி செய்தார். இதற்கு எதிராக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சுங்க வரி இல்லா இறக்குமதி பொருட்களை சட்ட விரோதமாக பயன்படுத்தி நிரவ் மோடி வரி ஏய்ப்பில் ஈடுபட்டதை வருவாய் புலனாய்வுத்துறை கண்டறிந்தது. அதன்படி, ரூ.52 கோடி அளவுக்கு அவர் சுங்க வரி ஏய்ப்பில் ஈடுபட்டது தெரியவந்தது.
இது தொடர்பாக, நிரவ் மோடி மற்றும் குஜராத்தின் சூரத்தை மையமாக கொண்டு செயல்பட்டு வரும் அவரது 3 நிறுவனங்கள் மீது வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு பலமுறை சம்மன் அனுப்பியும், நிரவ் மோடி ஆஜராகவில்லை.
இதனால், அவருக்கு எதிராக சூரத் நீதிமன்றம் சமீபத்தில் கைது வாரண்டு பிறப்பித்தது. இந்த வாரண்டை டிஆர்ஐ அதிகாரிகள் இ-மெயில் மூலம் நிரவ் மோடிக்கு அனுப்பி வைத்து உள்ளனர்.
இந்நிலையில், நாட்டை விட்டு தப்பி ஓடிய அவரை கைது செய்ய சர்வதேச போலீசாரின் உதவி கேட்கப்பட்டுள்ளது.