பிரதமர் நரேந்திர மோடி உயிருக்கு எப்போதும் இல்லாத அளவுக்கு ஆபத்து இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்த்ல நடக்க உள்ளது. இதற்கு பாஜக சார்பில் பிரசாரம் செய்வதில் பிரதமர் மோடி முக்கியப் பங்காற்றுவார். இதையொட்டி, பிரதமர் தரப்பிலும் நிறைய பொது நிகழ்ச்சிகளுக்கு வரிசையாக ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தான், மத்திய உள்துறை அமைச்சகம், ‘பிரதமர் மோடி உயிருக்கு எப்போதும் இல்லாத அளவுக்கு ஆபத்து நிலவி வருகிறது’ என்று தெரிவித்துள்ளதாக தகவல். இது குறித்து உள்துறை அமைச்சகம், அனைத்து மாநிலங்களுக்கும் மிக முக்கிய சுற்றறிக்கை அனுப்பியுள்ளதாம்.
இதையொட்டி, பிரதமர் மோடிக்கு அருகாமையில் எந்த தனி நபரும் போகக் கூடாது. அமைச்சராக இருந்தாலும் பிரதமரின் எஸ்.பி.ஜி படை சோதனைக்குப் பின்னர் தான் பிரதமருக்கு அருகில் அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாம்.
சாலை வழியாக பிரதமர் மக்களை சந்திக்கும் நிகழ்ச்சிகளுக்கு கூடுதல் கவனம் இருத்தல் வேண்டும் எனவும் பிரதமரைச் சுற்றியுள்ள பாதுகாப்பு அதிகாரிகளின் எண்ணிக்கை அதிகமாக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.