கர்நாடகா மாநிலத்தில் 4 ஆண்டுகள் கொத்தடிமைகளாக இருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேரை அதிகாரிகள் மீட்டனர்.
ஒசூர் அருகிலுள்ள தேன்கனிக்கோட்டை பகுதியை சேர்ந்தவர்கள் மாதப்பா- கெஞ்சம்மா தம்பதி. இவர்களுக்கு ஒன்பது குழந்தைகள் உள்ளன.
கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு, கர்நாடகா மாநிலம் ராம்நகர் மாவட்டம் மாலவதடியில் உள்ள பண்ணைக்கு பணிக்கு சென்றனர்.
மாதப்பாவும் அவரது மனைவி கெஞ்சம்மாவும், தோட்ட வேலை செய்து வந்துள்ளனர். அவர்களது பிள்ளைகள் கால்நடைகளை மேய்த்து வந்துள்ளனர்.
இதற்காக அந்த குடும்பத்தினருக்கு ஆண்டுக்கு ஒரு முறை 60 ஆயிரம் ரூபாய் ரொக்கத் தொகை பண்ணை உரிமையாளர் வழங்கியுள்ளார்.
தன்னார்வ அமைப்பு அளித்த தகவலின் அடிப்படையில், மாலவதடி விரைந்த அதிகாரிகள் குழு கொத்தடிமைகளாக இருந்த 11 பேரை மீட்டனர்.
இது குறித்து கர்நாடகா வருவாய்த்துறை கிருஷ்ணகிரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிக்கு தகவல் தெரிவித்துள்ளது. மீட்கப்பட்ட மாதப்பா குடும்பத்தினர் 11 பேரும் விரைவில் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு அழைத்து வரப்பட உள்ளனர்.