காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்ப கர்நாடகா மாநில அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருவில் உள்ள சட்டமன்றமான விதான்சவுதால், முதலமைச்சர் குமாரசாமி தலைமையில், அனைத்துக்கட்சி கூட்டம் நடந்தது. துணை முதலமைச்சர் பரமேஸ்வரா நீர்ப்பாசனத்துறை அமைச்சர் டி.கே. சிவகுமார், கர்நாடகா சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடியூரப்பா மற்றும் சட்ட வல்லுநர்கள் உள்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.
சுமார் 2 மணி நேரம் நடந்த கூட்டத்தில், காவிரி பிரச்சினை தொடர்பாக பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நீர்ப்பாசனத்துறை அமைச்சர் டி.கே.சிவக்குமார், "காவிரி விவகாரத்தில் கர்நாடகா மாநில கோரிக்கையை நிராகரித்து மத்திய அரசு, மேலாண்மை ஆணையம் அமைத்துள்ளது. இந்த விஷயத்தில் கர்நாடகா மாநிலத்திற்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது."
"காவிரி தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள 'ஸ்கீம்' என்கிற திட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. ஜூலை 2-ல் டெல்லியில் நடைபெற உள்ள காவிரி மேலாண்மை ஆணையம் முதல் கூட்டத்தில் கர்நாடக அரசின் நிலைபாடு குறித்து குரல் எழுப்புவோம்."
அதேபோல், "நாடாளுமன்றத்திற்கு உள்ளே ,வெளியே கர்நாடக மாநில நாடாளுமன்ற உறுப்பினர்கள் குரல் எழுப்புவார்கள்." என கர்நாடகா மாநில நீர்பாசனத்துறை அமைச்சர் டி.கே.சிவக்குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.