இந்தியாவின் பொருளாதாரம் நல்ல முன்னேற்றம் கண்டு வருவதாகவும், 2025 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியான ஜிடிபி இரண்டு மடங்காகும் எனவும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கூறியுள்ளார்.
புது டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கோவிந்த், ‘இந்திய பொருளாதாரம் ஒரு மாபெரும் முன்னேற்றத்தைக் காணப் போகிறது. இன்னும் பத்து ஆண்டுகளில், இல்லையென்றால் 2025 ஆம் ஆண்டுக்குள்ளேயே இந்தியாவின் ஜிடிபி இரண்டு மடங்காக உயரும்.
கடந்த சில ஆண்டுகளாக பொருளாதாரத்தை முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்ல அரசு தரப்பிலிருந்து நிறைய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. அதில் ஜிஎஸ்டி வரி முறை அமலாக்கியது குறிப்பிடத்தக்க ஒன்று. ஜிஎஸ்டி-யால் நேரடி வரி கட்டும் விகிதம் பன்மடங்கு அதிகரித்தது.
அதேபோல, பதிவு செய்யப்படாமல் இருந்த நிறைய நிறுவனங்கள் தங்களை முன் வந்து பதிவு செய்யும் நிலையும் உருவாக்கப்பட்டது. இதனால், சரியான முறையில் வரி செலுத்தும் சமூகமாக இந்தியா மாறி வருகிறது’ என்று கூறியுள்ளார்.
இன்றோடு சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும் ஜிஎஸ்டி வரி முறை அமல்படுத்தப்பட்டு ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது. இதையொட்டி, மத்திய அரசு ‘ஜிஎஸ்டி நாளை’ கொண்டாடியது. ஆனால், எதிர்கட்சிகள் ஜிஎஸ்டி வரி குறித்து பலத்த விமர்சனங்களை முன் வைத்தன.