நாட்டின் தலைநகரான டெல்லிக்கு தலைமையாக இனி இருக்கப்போவது டெல்லி முதல்வரா அல்லது டெல்லி ஆளூநரா என்பது குறித்தான தீர்ப்பு இன்று உச்ச நீதிமன்றத்தில் வெளியாக உள்ளது.
ஆம் ஆத்மி கட்சி 2015 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றி பெற்று, தேர்ந்தெடுக்கப்பட்ட அதன் பிரதிநிதிகளின் கீழ் ஆட்சி நடத்தப் பார்க்கிறது. ஆனால், இந்த விவகாரத்தில் பாஜக நியமித்த டெல்லியின் துணை நிலை ஆளுநர் அஜித் பைஜல், எதேச்சதிகார போக்குடன் நடந்து கொள்கிறார் என்பது குற்றச்சாட்டு.
இதனால், டெல்லியில் யார் சொல்வதுபடி ஆட்சி நிர்வாகம் நடக்க வேண்டும் என்பதில் குழப்பம் நிலவி வந்தது. இந்த விஷயம் தொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு, ஆளுநருக்குச் சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டது. இதை எதிர்த்து ஆம் ஆத்மி, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 பேர் கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. கடந்த டிசம்பர் மாதத்துடன் இரு தரப்பு வாதங்களும் முடிவடைந்துவிட்ட நிலையில், இன்று தீர்ப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.