சசிகலாவுக்கு எதிரான செல்வ வரி தொடர்பான வழக்கு விசாரணையில் இருந்து நீதிபதி விலகியுள்ளார்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா 1996-97 ஆண்டுகளில் ரூ.4 கோடியே 97 லட்சம் மதிப்புள்ள சொத்துக்கு ரூ.10 லட்சத்து 13 ஆயிரம் செல்வ வரி செலுத்த வில்லை என்று குற்றம் சாட்டப்பட்டது.
இந்த குற்றச்சாட்டை எதிர்த்து, சசிகலா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த இந்த வழக்கு, நீதிபதிகள் எஸ்.மணிகுமார், சுப்பிரமணிய பிரசாத் அடங்கிய அமர்வு முன், விசாரணைக்கு வந்தது.
அப்போது, இந்த வழக்கு விசாரணையில் இருந்து விலகுவதாக நீதிபதி சுப்பிரமணிய பிரசாத் தெரிவித்தார். வழக்கறிஞராக இருந்தபோது, அவர் பல வழக்குகளில் சசிகலாவுக்கு ஆதரவாக ஆஜராகியுள்ளதால் விசாரணையில் இருந்து விலகியுள்ளார்.
இதையடுத்து நீதிபதிகள், இந்த வழக்கை வேறு அமர்வுக்கு மாற்றும்படி, தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்தனர்.