உத்தரப் பிரதேச மாநிலம், எடாவாவில், பள்ளிக்கு அனுப்பாத பெற்றோர் மீது, சிறுவன் காவல்நிலையத்தில் புகார் அளித்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒருவனுக்கு அழிவு இல்லாத சிறந்த செல்வம் கல்வி என்கிறது திருக்குறள். ஆனால் நாட்டின் பெரும்பாலான குக்கிராமங்களில் வசிப்போருக்கு கல்வி என்பது இன்னும் எட்டா கனியாகத்தான் இருக்கிறது.
குறிப்பாக வடமாநிலங்களில் பள்ளிக்கூடம் இல்லாத கிராமங்கள் இன்னும் இருக்கத்தான் செய்கிறது. அதில், வறுமை காரணமாக படிப்பை தொடர முடியாமல் தவிப்போரின் எண்ணிக்கைதான் அதிகம்.
உத்தரப் பிரதேச மாநிலம் எடாவா கிராமத்தைச் சேர்ந்த கவுரவ் என்ற சிறுவனுக்கு இந்த நிலைதான் ஏற்பட்டுள்ளது. குடும்ப வறுமை காரணமாக மாணவனை பெற்றோர்கள் தினக்கூலி வேலை செய்ய கட்டாயப்படுத்தியுள்ளனர். படிப்பில் அதிக நாட்டம் கொண்ட சிறுவன், எடாவா காவல்நிலையத்திற்கு சென்றான்.
தம்மை பள்ளிக்கு அனுப்ப மறுக்கும் பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளான். புகாரை ஏற்றுக்கொண்ட காவல் ஆய்வாளர், சிறுவனின் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினார்.
அப்போது சிறுவனை பெற்றோர், தினக்கூலி வேலை செய்ய கட்டாயப்படுத்தியது தெரிய வந்தது. இதனையடுத்து, சிறுவனின் விருப்பப்படி காவல் ஆய்வாளர் தனியார் பள்ளியில் அட்மிஷன் பெற்று சேர்த்து விட்டார். கல்விக்காக, பெற்றோர் மீது சிறுவன் புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.