பெண்களும், குழந்தைகளும் வாழ்வதற்கு தகுதியற்ற மாநிலமாக தமிழகம் மாறிக்கொண்டிருப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க கடுமையான நடவடிக்கைகளை எடுக்க ஆணையிடக் கோரி உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள பொதுநல வழக்கில், தமிழக அரசின் தலைமைச் செயலரும், காவல்துறை தலைமை இயக்குனரும் தாக்கல் செய்துள்ள புள்ளி விவரங்களில்தான் மகளிரும், குழந்தைகளும் தமிழகத்தில் எந்த அளவுக்கு ஆபத்தான சூழலில் உள்ளனர் என்பது குறித்த புள்ளி விவரங்கள் இடம்பெற்றுள்ளன.
பெண்களுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை அளவுக்கு அதிகமாக இருப்பது ஒருபுறமிருக்க, இத்தகைய குற்றங்களைச் செய்தவர்களில் 95%க்கும் மேற்பட்டோர் தண்டனை பெறாமல் தப்பி விடுகின்றனர் என்பதுதான் அதிர்ச்சியளிக்கும் உண்மையாகும்.
இத்தகைய இழிநிலைக்கு தமிழகத்தை தள்ளியவர்கள் வெட்கப்பட வேண்டும். மகளிருக்கு எதிரான குற்றங்களைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
மகளிருக்கு எதிரான குற்ற வழக்குகளை விசாரிக்க மாவட்டம் தோறும் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப் பட்டுள்ளன. இந்த நீதிமன்றங்களில் கட்டமைப்பு வசதியை மேம்படுத்தி வழக்கு விசாரணையை வேகப் படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தேவைப்பட்டால் கூடுதல் மகளிர் நீதிமன்றங்களை அமைக்க வேண்டும். தமிழகத்தில் அனைத்து காவல் உட்கோட்டங்களிலும் மகளிர் காவல்நிலையங்கள் அமைக்கப் பட்டுள்ள போதிலும், அவை மகளிருக்கு எதிரான அனைத்துக் குற்றங்களையும் விசாரிப்பதில்லை.
இந்த நிலையை மாற்றி, மகளிர் காவல் நிலையங்களை வலுப்படுத்துதல், கூடுதல் அதிகாரங்களை வழங்குதல், அதிக எண்ணிக்கையில் புதிய காவல் நிலையங்களைத் திறத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலமாக பெண்களுக்கு எதிரான குற்றங்களைக் கட்டுப்படுத்த வேண்டும்.
மேலும், தமிழக காவல்துறையில் மகளிர் பாதுகாப்புக்கென தனிப்பிரிவை மகளிர் கூடுதல் டிஜிபி தலைமையில் தொடங்க வேண்டும்” என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.