நாட்டில் உள்ள எல்லா அரசியல் கட்சிகளும் ஒரே ரகம் என நடிகர் பிரகாஷ் ராஜ் கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னையில் மறக்க முடியுமா தூத்துக்குடியை என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. இதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் பிரகாஷ்ராஜ், "மக்களை பயத்தில் வைத்திருக்க வேண்டும் என்பதே அரசுகளின் நோக்கம். எல்லா அரசியல் கட்சிகளும் ஒரே ரகம். மக்கள் சார்பாக யாரும் இல்லை" எனக் குற்றம்சாட்டினார்.
"தமிழகத்தில் நாம் பேசிக்கொண்டிருப்பது அரசியல் வாதிகள் உடன் இல்லை. ரியல் எஸ்டேட் புரோக்கர்களிடம் பேசுகிறோம்.தமிழ்நாட்டை கூறுபோட்டு விற்கின்றனர்" என பிரகாஷ் ராஜ் விமர்சனம் செய்தார்.
"மத்தியில், மாநிலத்தில் ஆட்சி செய்து கொண்டு இருப்பவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள். இவர்களுக்கு அடுத்த முறை ஆட்சிக்கு வரமாட்டோம் என்பது தெரிந்துவிட்டதால், எதையும் செய்ய துணிந்துவிட்டனர்" என அவர் தெரிவித்தார்.
"தேர்தல் அரசியலில் பங்கெடுத்தால் நல்லது செய்ய முடியாது.சுயநலமில்லாமல் மக்களுக்கான உரிமையை பேச வேண்டும். நான் முதலில் மனிதன் இவர்களை தொடர்ந்து எதிர்ப்பேன்." என பிரகாஷ் ராஜ் பேசினார்.
அரசியலுக்குள் வராமலேயே பிரகாஷ்ராஜ் தொடர்ந்து, அரசையும், நலத்திட்டங்களை தொடர்ந்து விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.