கோவா அருகே காட்டெருமைத் தாக்கியதால் 22 வயதுடைய இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
வடக்கு கோவாவில் இருக்கும் சத்தாரி மாவட்டத்தில் உள்ளது மகாதேயி வனவிலங்கு சரணாலயம். இத்துயர சம்பவம் செல்-தஹடா கிராமத்தில் நடந்துள்ளது. இது குறித்து உள்ளூர் போலீஸ், ‘பூஜன் மெலேகர், தான் செய்து வரும் தினப் பணிக்காக காலை 7 மணிக்கு மகாதேயி சரணாலயம் வழியாக, செல்-தஹாடா கிராமப் பகுதி அருகாமையில் சென்று கொண்டிருந்த போது, காட்டெருமை அவரைத் தாக்கியுள்ளது.
அவரது சகோதரருக்கும் இந்த சம்பவத்தில் காயம் ஏற்பட்டுள்ளது. காயமடைந்த பூஜனை அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. ஆனால், அங்கு அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். பூஜன் அனுமதிக்கப்படிருந்த மருத்துவமனைக்கு இன்று காலை நேரில் சென்று பார்த்தார் கோவா மாநில சுகாதாரத் துறை அமைச்சர் விஷ்வஜித் ரானே.
அவர், ‘சம்பவம் நடந்தப் பகுதியில் சுற்றித் திரியும் காட்டெருமைகளுக்கு மயக்க மருந்து செலுத்தி அவைகளை காட்டுப் பகுதிக்கு இட்டுச் சென்று விடுமாறு வனத்துறை அதிகாரிகளிடம் நான் முன்னரே கூறியிருந்தேன். ஆனால், என் பேச்சுக்கு அவர்கள் மதிப்புக் கொடுக்கவில்லை. இந்த விஷயம் குறித்த முதல்வர் மனோகர் பாரிக்கரிடம் எடுத்துக் கூறுவேன்’ என்றுள்ளார்.
கடந்த 30 நாட்களில் இதைப் போன்ற சம்பவம் 2 வது முறையாக நடந்துள்ளது. சில நாட்களுக்கு முன்னர், மகாதேயி சரணாலயப் பகுதியில் 45 வயது மதிக்கத்தக்க பெண் காட்டெருமைத் தாக்கி பலியானார் என்பது குறிப்பிடத்தக்கது.