சென்னையில் நேற்று மாலை மழை பெய்ததை அடுத்து, கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரமடைந்துள்ளது. இதன் எதிரொலியாக, தமிழகத்தில் கோவை மாவட்டதம், நீலகிரி மாவட்டம், கன்னியாகுமரி உள்ளிட்ட இடங்களில் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்து வருகிறது.
தொடர்ந்து, சென்னையில் நேற்று காலை முதல் மிதமான வெயில் அடித்து வந்தது. அதிகபட்சமாக 35 டிகிரி செல்சியஸ் வெயில் பதிவானது. இந்நிலையில், மாலை 6.15 மணியளவில் சென்னையின் பல இடங்களில் திடீரென மேகம் இருண்டு காணப்பட்டது. அடுத்த சில நிமிடங்களில் மழை கொட்டியது.
சென்னையில், தேனாம்பேட்டை, தி.நகர், மயிலாப்பூர், திருவான்மியூர், மெரினா காமராஜர் சாலை, உள்ளிட்ட பல இடங்களில் நேற்று மாலை மழை பெய்தது. வெப்பச் சலனம் காரணமாக சென்னையில் மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெப்பச் சலனத்தால் பிற இடங்களிலும் இன்று மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.