பெங்களூருவில் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்குவதில்லை என்று கர்நாடகா மாநில அரசு மீது குழந்தைகள் மற்றும் பெண்கள் நலத்துறை அமைச்சர் மேனகா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
பெங்களூருவில் கடந்த செவ்வாய்க்கிழமை பெண் பயணி ஒருவர் கால் டாக்சியில் சென்றுள்ளார். அப்போது அவரிடம் கால் டாக்சி டிரைவர் தவறாக நடக்க முயன்றதால் அந்த பெண் தனது பயணத்தை ரத்து செய்தார். இது கடந்த ஒரு மாதத்தில் நடைபெற்றுள்ள மூன்றாவது சம்பவம் என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள மேனகா காந்தி, “இந்த நிகழ்ச்சி மூலம் கர்நாடக அரசு பெண்களின் பாதுகாப்பில் உரிய அக்கறை செலுத்தவில்லை என தெரிகிறது.
எனவே, இதுபோன்ற முக்கியமான விஷய்த்தில் முதலமைச்சர் குமாரசாமி கவனம் செலுத்த வேண்டும்” எனவும் வலியுறுத்தியுள்ளார்.
பெங்களூருவில் சமீப காலமாக கால் டாக்சியில் செல்லும் பெண்களிடம் அதன் ஓட்டுநர்கள் அத்துமீறி நடக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது கவலையளிப்பதாக உள்ளது.