பேரிடர் மேலாண்மை பயிற்சியின்போது கோவை கல்லூரி மாணவி பரிதாப பலி

Jul 13, 2018, 08:40 AM IST

கோவை தனியார் கல்லூரியில் பேரிடர் மேலாண்மை பயிற்சியில் 2வது மாடியில் இருந்து குதித்தபோது மாணவி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து, பயிற்சியாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை அருகே தொண்டாமுத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் தேசிய பேரிடர் மேலாண்மை குழு சார்பில் சிறப்பு பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. இதில், தீ விபத்து, நிலநடுக்கம் போன்ற பேரிடர் காலங்களில் கட்டிடங்களில் இருந்து குதித்து எவ்வாறு தப்பிப்பது குறித்து பயிற்சி மாணவர்களுக்கு அளிக்கப்பட்டது.

இந்நிலையில், அக்கல்லூரியில் மூன்று மாடிகள் கொண்ட கட்டிடத்தின் 2வது மாடியில் இருந்து மாணவிகள் கீழே குதிக்க பயிற்சி அளிக்கப்பட்டது. இதற்காக, கீழே வலை மூலம் அவர்களை பிடித்து காப்பாற்றுவதற்காகவும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது.
இதில், பிபிஏ 2ம் ஆண்டு படித்து வந்த லோகேஸ்வரி(19) என்ற மாணவியும் 2வது மாடியில் இருந்து குதிக்கும் பயிற்சியில் ஈடுபட்டார். ஆனால், அவர் அங்கிருந்து கீழே குதிப்பதற்கு பயந்துள்ளார். அப்போது, அருகில் நின்றுக் கொண்டிருந்த பயிற்சியாளர் லோகேஸ்வரிக்கு தைரியம் கொடுத்துள்ளார்.

ஒரு கட்டத்தில் பயிற்சியாளர் மாணவியின் கையை பிடித்து கீழே குதிக்க வைத்துள்ளார். அப்போது, யாரும் எதிர்பாராத நிலையில் லோகேஸ்வரி கீழே குதித்த வேகத்தில் முதல் மாடியில் இருந்த ஸ்லாப்பில் அவரது தலை மற்றும் கழுத்து பகுதியில் பலமாக இடித்து கீழே விழுந்தார். ரத்த வெள்ளத்தில் கிடந்த லோகேஸ்வரியை கண்டு சக மாணவிகள் அலறித்துடித்தனர்.

இதையடுத்து, உடனடியாக லோகேஸ்வரியை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, முதலுதவி அளிக்கப்பட்டதை அடுத்து, கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்ல பரிந்துரைத்தனர். ஆனால், லோகேஸ்வரி மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

லோகேஸ்வரியின் தந்தை புகார் தெரிவித்ததை அடுத்து, போலீசார் பயிற்சியாளர் ஆறுமுகத்தை கைது செய்தனர்.

You'r reading பேரிடர் மேலாண்மை பயிற்சியின்போது கோவை கல்லூரி மாணவி பரிதாப பலி Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை