‘இந்த நாட்டுக்காகவும் தன் வாழ்க்கை முழுவதையும் வாழ்ந்து இறக்கவும் செய்தவர் என் அப்பா ராஜிவ் காந்தி’ என்று குமுறியுள்ளார் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி.
சமீபத்தில் ‘நெட்ஃபிலிக்ஸ்’ தளத்தில் வெளியான ‘சேக்ரட் கேம்ஸ்’ என்ற தொடரில் ராஜிவ் காந்தி குறித்து அவதூறான கருத்துகள் கூறப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது குறித்து தேசிய அளவில் காங்கிரஸ் தலைவர்கள் பலர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
பாஜக-வினரும் தொடரில் ராஜிவ் காந்தி குறித்து வரும் வசனங்களை தனியாக வெட்டி எடுத்து ட்விட்டரில் பகிர்ந்ததால் இந்த விஷயம் பூதாகரமானது. இந்நிலையில் இது குறித்து மனம் திறந்துள்ளார் ராகுல் காந்தி. அவரது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், ‘ஆர்.எஸ்.எஸ்/ பாஜக கருத்து சுதந்திரம் இருக்கக் கூடாது என்று நினைக்கின்றன. ஆனால், கருத்து சுதந்திரம் என்பது அடிப்படை ஜனநாயக உரிமை என்று நான் நம்புகிறேன்.
எனது அப்பா, இந்தியாவுக்காக வாழ்ந்து மறைந்தவர். ஒரு புனைவு தொடரில் வரும் கதாபாத்திரத்தின் வசனம் அதை மாற்றிவிட முடியாது’ என்று கருத்திட்டுள்ளார். ராஜிவ் காந்திக்கு எதிராக அவதூறு கருத்து பரபரப்படுகிறது என்று கூறி காங்கிரஸ் தரப்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.