மராத்தியர்கள் மஹாராஷ்திரா மாநிலத்தில் தங்களுக்குத் தகுந்த இடஒதுக்கீடு கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மகாராஷ்டிராவில் இருக்கும் மராத்திய அமைப்புகள், தங்களுக்கு அரசு கல்வி நிறுவனங்கள் மற்றும் வேலைகளில் தனியாக இட ஒதுக்கீடு வேண்டும் என்று கோரி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், இன்று மும்பையில் முழு அடைப்பு பந்துக்கு மராத்திய அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன.
இதனால், மகாராஷ்டிர மாநிலத்தில் பதற்றம் நிலவி வருகிறது. இந்த பந்த் அழைப்பை அடுத்து, பல தனியார் பஸ் நிறுவனங்கள், இன்று அவர்களின் வாகனத்தை இயக்கப் போவதில்லை என்று தெரிவித்துள்ளதாக தகவல் வந்துள்ளது. அவுரங்காபாத்தின் கிராமப்புற பகுதிகளில் நேற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இணைய சேவை முடக்கப்பட்டது.
அதே நேரத்தில், மும்பையில் இருக்கும் பள்ளி மற்றும் கல்லூரிகள் இன்று வழக்கம் போல இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மகராஷ்டிரா மாநில முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், ‘மக்கள் அமைதி காக்க வேண்டும். இட ஒதுக்கீடு கொடுப்பது தொடர்பாக அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது’ என்று கூறியுள்ளார்.