செல்போனில் தானாக பதிவான பழைய உதவி எண்ணால் தகவல்கள் திருடப்படாது என ஆதார் அடையாள அட்டை ஆணையம் அறிவித்துள்ளது.
வங்கி கணக்குகள், பரஸ்பர நிதி முதலீடுகள், பான் அட்டை, ஓய்வூதியம், சமூக நல திட்டங்கள், செல்போன் சேவை, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி, ஓட்டுனர் உரிமம், வாகனங்கள் பதிவு, சமையல் கியாஸ் மானியம் ஆகியவற்றுக்கு ஆதார் அடையாள எண் கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ளது.
இந்த ஆதார் அடையாள அட்டை மூலம் மக்களின் தகவல்கள் திருடப்படுவதாக பல சர்ச்சைகள் எழுந்தவண்ணம் உள்ளது.
இந்நிலையில் ஆதார் ஆணையத்தின் பயன்பாட்டில் இல்லாத பழைய உதவி எண் 1800-300-1947 செல்போன்களில் திடீரென பதிவானது. தானாகவே அந்த எண் காண்டக்ட் சிலிட்டில் பதிவானதால், பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
செல்போன்களில் தானாக பதிவான எண் மூலம் தனி நபர்களின் தகவல்களை தெரிந்து கொள்ள முடியும் என்று ஒரு தகவல் வெளியானது. இது செல்போன் பயன்பாட்டாளர்களிடம் கடும் அதிர்ச்சியையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தங்களைப் பற்றிய ரகசிய தகவல்கள் திருடப்பட்டு விடுமோ என்று செல்போன் பயன்பாட்டாளர்கள் பயந்தனர். ஆனால் அப்படி பயப்பட வேண்டியதில்லை என்று ஆதார் அடையாள அட்டை ஆணையம் இன்று அறிவித்துள்ளது.
"ஆதாரின் பாதுகாப்பு குறித்த அடிப்படை ஆதாரமற்ற வதந்திகள் பரப்பப்படுகிறது. தகவல்கள் அனைத்தும் பாதுகாப்பாக உள்ளது. ஆதார் குறித்த தவறான தகவல்களை சமூக வலைதளங்களில் பகிர்வதன் மூலம் மக்களுக்கு தேவையற்ற கால விரயம்தான்." என்று ஆதார் அடையாள ஆணையம் தெரிவித்துள்ளது.