தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு, நெசவாளர்களுக்கு உதவும் வகையில் கைத்தறி துணிகளை வாங்க வேண்டும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்துக்களுடன் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: சுதேசி இயக்கத்தின் போர் வாளாகவும், கைத்தறி தொழிலின் முக்கியத்துவமும், அது சமூக பொருளாதார வளர்ச்சிக்கு ஆற்றி வரும் பங்களிப்பு குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்திடவும், கைத்தறித் தொழிலை மேம்படுத்தி, கைத்தறி நெசவாளர்களின் பெருமையை உயர்த்திட வேண்டுமென்ற உயரிய நோக்கிலும் ஆகஸ்ட் திங்கள் 7-ந்தேதி தேசிய கைத்தறி தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் சுமார் 1.90 லட்சம் நெசவாளர் குடும்பங்கள் உள்ளதோடு, இத்தொழில் 3.19 லட்சம் நெசவாளர்கள் மற்றும் நெசவு சார்ந்த உப தொழில் புரிவோருக்கு வேலை வாய்ப்பு வழங்கி வருகிறது.
தமிழ்நாடு கூட்டுறவு கைத்தறி நெசவாளர் முதியோர் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் வழங்கும் திட்டம், நெசவாளர்களுக்கு முதல்-அமைச்சரின் சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் வழங்கும் திட்டம், கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்களுக்கு விலையில்லா மின்சாரம் வழங்கும் திட்டம், கைத்தறி நெசவாளர்களுக்கு ஆயுள் காப்பீடு திட்டம், நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு மருத்துவ காப்பீடு திட்டம், நெசவாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டம்,
மாநில அளவில் சிறந்த நெசவாளர் விருது வழங்கும் திட்டம், திறன்மிகு கைத்தறி நெசவாளர்களுக்கு பரிசுகள் வழங்கும் திட்டம், உற்பத்திப் பொருட்களில் புதுமை முயற்சிகளையும் பல்வகைப்படுத்துதலையும் ஊக்குவிக்கும் வகையில் நிதியுதவி அளிக்க கைத்தறி உதவித் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.
நெசவாளர்களுக்கு தொடர்ந்து வேலைவாய்ப்பு வழங்கி, அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திடும் வகையில், தமிழகத்தில் உள்ள அனைத்து பிரிவு மக்களும், கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களின் விற்பனை நிலையங்களிலும்,
கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களிலும் விற்பனை செய்யப்படும், தூய சரிகை, தூய பட்டு மற்றும் பருத்தி கைத்தறி ரகங்களை வாங்கி அணிந்து, கைத்தறி நெசவாளர்களுக்கு ஆதரவு அளிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
கைத்தறி தொழில் மேன்மேலும் வளரவும், கைத்தறி நெசவாளர்களின் வாழ்க்கை தரம் உயரவும், அம்மாவின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு, எப்போதும் உறுதுணையாக இருக்கும் என்பதை தெரிவித்துக் கொண்டு, தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள கைத்தறி நெசவாளர்கள் மற்றும் இத்தொழில் சார்ந்த தொழிலாளர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.