திமுக தலைவர் கருணாநிதியின் உடலை அண்ணா சமாதி அருகே அடக்கம் செய்ய தமிழக அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.
மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடலை அண்ணா நினைவிடத்தில் அடக்கம் செய்ய தமிழக அரசிடம் திமுக சார்பில் அனுமதி கோரப்பட்டது. இது தொடர்பாக திமுக செயல் தலைவர் ஸ்டாலின், முக்கிய நிர்வாகிகள் முதலமைச்சரை சந்தித்து பேசினர்.
இந்நிலையில், திமுக தலைவர் கருணாநிதியை அண்ணா நினைவிடத்தில் அடக்கம் செய்ய அனுமதிக்க முடியாது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மெரினாவுக்கு பதில் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு எதிரே காந்தி மண்டபம் அருகே 2 ஏக்கர் அரசு நிலத்தை ஒதுக்க தயாராக இருப்பதாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
மெரினாவில் அடக்கம் செய்ய பல வழக்குகள் நிலுவையில் உள்ளதாலும் சட்டச் சிக்கல்கள் இருப்பதாலும் அங்கு இடத்தை ஒதுக்க முடியவில்லை என்றும் கிரிஜா விளக்கம் அளித்துள்ளார்.
தமிழக அரசின் இந்த போக்கு, திமுக தொண்டர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்ணா நினைவிடத்தில் கருணாநிதிக்கு இடம் ஒதுக்கும் வரை தமிழக அரசைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.