உடன்பிறப்புகள் கட்டுபாடுக் காக்க வேண்டும்- ஸ்டாலின் வேண்டுகோள்

Aug 7, 2018, 20:08 PM IST
தி.மு.க கட்சி தொண்டர்கள், கட்டுபாடுக் காத்து, தமிழினத் தலைவர் கலைஞர் அவர்களின்  நீங்காப் புகழ் என்றென்றும் நிலைத்து நிற்க செய்ய வேண்டும் என அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்," உலகம் முழுவதும் வாழும் தமிழர்களின் இதயங்களிலும்,கோடிக்கணக்கான கழக உடன்பிறப்புகளின் உயிர்மூச்சிலும் இரண்டறக் கலந்திருக்கின்ற நம் கழகத் தலைவர் கலைஞர் அவர்களை இழந்து வாடுகின்ற துயரம் மிகுந்த மிகச் சோதனையான காலகட்டத்தில் அன்பு உடன்பிறப்புகள் அனைவரும் பேரறிஞர் அண்ணா அவர்களும், தலைவர் கலைஞர் அவர்களும் கற்றுத் தந்த ”கடமை, கண்ணியம், கட்டுப்பாடு” ஆகியவற்றை மனதில் உறுதியாக நிலை நிறுத்தி எவ்வித அசம்பாவிதங்களுக்கும் இடமளித்து விடாமல் அமைதி காக்க வேண்டும் என்று பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
 
நம் உயிரனையத் தலைவரின் உடல்நலன் காக்க கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பெரும் முயற்சியை சென்னை காவேரி மருத்துவமனை மருத்துவர்களும் நிர்வாகிகளும் தொடர்ந்து மேற்கொண்டு வந்தனர். கடந்த 11 நாட்களாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தலைவர் கலைஞர் அவர்களுக்கு இரவு-பகல் பாராது சிறந்த முறையில் சிகிச்சை அளித்து உடல் நலத்தைப் பேணி காத்த அவர்களின் செயல்பாடு போற்றுதலுக்குரியது.
 
தலைவரின் உயிரை இத்தனை நாட்களாகக் கட்டிக்காத்த காவேரி மருத்துவமனை நிர்வாகத்திற்கு உடன்பிறப்புகள் அனைவரும் நன்றி சொல்லக் கடமைப் பட்டுள்ளோம். அதன் அடையாளமாக, மருத்துவமனை வளாகத்திலிருந்து கழகத்தினர் அனைவரும் எவ்வித இடையூறும் அசம்பாவிதமுமின்றி கலைந்து செல்ல வேண்டுமெனக் கேட்டுக்கொள்வதுடன், கழக நிர்வாகிகள் அந்தப் பணியை முன்னின்று மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
 
தலைவர் கலைஞர் அவர்கள் ஐந்து முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராக
இருந்தவர். 50 ஆண்டுகள் நமது பேரியக்கமாம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராகப் பொறுப்பேற்று அரை நூற்றாண்டு காலம் நம்மையெல்லாம் சீரும் சிறப்புமாக வழிநடத்தித் தமிழ்நாட்டின் எதிர்காலச் சிப்பாய்களாக உருவாக்கியவர்.
நூறாண்டு கண்ட திராவிட இயக்கத்தின் முக்கால் நூற்றாண்டு காலத்துக்குத்
திராவிட இயக்கத்திற்கு என்று போர்ப்படையை உருவாக்கி, சுயமரியாதை  கொள்கைகளையும், தன்மான உணர்வுகளையும், இலட்சியங்களையும்
தமிழினத்தின் இதயத்தில் பதிய வைத்தவர். அவ்வளவு பெருமை மிக்க தலைவருக்கு ஒப்பாரும் மிக்காரும் இனி திராவிட இயக்கத்தில் எவரும் இல்லை என்றாலும், அவரது கொள்கை லட்சியங்களும், சீரிய கோட்பாடுகளும், கற்றுத் தந்த கட்டுப்பாடுகளும் நம் குருதிகளில் என்றைக்கும் வற்றாத ஜீவநதி போல் பயணித்துக் கொண்டிருக்கும். அதுவே நம்மை இயக்கி கொண்டிருக்கும்.
 
சாதனை மிக்க பொது வாழ்க்கையின் சரித்திர நாயகர் தலைவர் கலைஞர்
அவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் உடன்பிறப்புகள் அனைவரும் துயரம் மிகுந்த நெருக்கடியான நேரத்தில் கட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டும். தலைவர் கலைஞர் அவர்களின் புகழுக்கு மாசு ஏற்படுத்திடாத வகையிலும், எவ்வித அசம்பாவிதங்களுக்கோ, பொது மக்களை இன்னலுக்கு உள்ளாக்கும் செயல்பாடுகளுக்கோ இடம் அளித்து விடாமலும், பொது சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தாமலும் அமைதி காக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறேன். 
 
இந்த துயரமிகச் சூழ்நிலையிலும் கழகத்திற்கு அவப்பெயர் தேடித் தரவேண்டும் என்ற தீய நோக்கத்துடன் சமூக வி ரோ த விஷமிகள் சிலர் ஊடுருவி, விரும்பத்தகாத செயல்களை செய்து, கழகத்தினர் மீது பழிபோட முனைவார்கள். அவர்களைக் கழகத்தினர் அடையாளம் கண்டு, அவர்களின் செயல்களைத் தடுத்து, காவல்துறையினரிடம் ஒப்படைத்து சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க ஒத்துழைத்திட வேண்டுகிறேன்.
 
திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு கட்டுக்கோப்பான இயக்கம் மட்டுமல்ல, ராணுவ கட்டுப்பாடு மிகுந்த உடன்பிறப்புகளை கொண்ட இயக்கம் என்பதை நிரூபித்துக் காட்டி, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினருக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்திட வேண்டியது கழகத்தினரின் கடமையாகும். 'என் ‘உயிரினும் மேலான உடன்பிறப்பே' என்று உணர்வோடு ஒலித்த வார்த்தைகளால் நம்மை காலந்தோறும் இயக்கி, இன்று நம் உயிருடன் கலந்து விட்ட தமிழினத் தலைவர் கலைஞர் அவர்களின் நீங்காப் புகழை என்றென்றும் நிலைத்திட செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்." என்றார்.

You'r reading உடன்பிறப்புகள் கட்டுபாடுக் காக்க வேண்டும்- ஸ்டாலின் வேண்டுகோள் Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை