சட்டத்தின் முன் சமம், பேச்சு மற்றும் கருத்துகளை வெளிப்படுத்தும் சுதந்திரம் (எழுத்து) ஆகிய இந்திய குடிமக்களுக்கான அடிப்படை உரிமைகள், வெளிநாட்டு இந்திய குடிமக்களுக்கும் (Overseas Citizens of India - OCI) உண்டு என்று டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
டாக்டர் கிறிஸ்டோ தாமஸ் பிலிப் என்பவர் தமது வெளிநாட்டு இந்திய குடிமகன் உரிமை ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் டெல்லி உயர்நீதி மன்ற நீதிபதி விபு பக்ரு இவ்வாறு கூறியுள்ளார்.
2012 நவம்பர் 22ம் தேதி, வெளிநாட்டு இந்தியருக்கான அட்டையும் வாழ்நாள் முழுவதற்குமான இந்திய விசாவும் கிறிஸ்டோ தாமஸூக்கு வழங்கப்பட்டது. 2014 ஜனவரி மாதம் முதல் பல முறை அவர் இந்தியா வந்து சென்றுள்ளார். பீகாரிலுள்ள ராக்ஸாலில் டங்கன் மருத்துவமனையில் தன்னார்வ மருத்துவராக சேவை புரிந்துள்ளார். 2016 ஏப்ரல் 26ம் தேதி, டாக்டர் கிறிஸ்டோ தாமஸ் பிலிப், புதுடெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இந்தியாவை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளார்.
நுண்ணறிவு பிரிவு அறிக்கையின்படி, டாக்டர் கிறிஸ்டோ தாமஸ் அமெரிக்காவில் பிறந்தவர் என்றும் அவர் பீகாரில் மருத்துவ மிஷனெரியாக பணியாற்றியதால் அவரது வெளிநாட்டு இந்திய குடிமகன் உரிமைய பறிக்கப்பட்டதாகவும் நீதிமன்றத்தில் ஓர் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
தான் கேரளாவில் பிறந்தவர் என்றும் அமெரிக்காவில் பிறந்தவர் அல்ல என்றும் கூறி, வெளிநாட்டு இந்திய குடிமகன் உரிமையை அமெரிக்காவில் ஹூஸ்டனிலுள்ள இந்திய தூதரகம் பறித்ததை எதிர்த்து கடந்த ஆண்டு டெல்லி நீதிமன்றத்தை அணுகியுள்ளார் டாக்டர் கிறிஸ்டோ. நீதிமன்றம் உரிய அதிகாரிகளை அணுகும்படி வழிநடத்தியுள்ளது. ஆனால், மேல்முறையீட்டு அதிகாரி கடந்த டிசம்பர் 22ம் தேதி, உரிமையை பறித்த தூதரரின் முடிவை உறுதி செய்தார். மேல்முறையீட்டு அதிகாரியின் முடிவை எதிர்த்து, டெல்லி உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இப்போது தீர்ப்பு வந்துள்ளது.
"மனுதாரர் அமெரிக்காவில் பிறந்தார் என்ற தகவல் தவறாக தரப்பட்டுள்ளது. குடியுரிமை சட்டம் 1955ன் பிரிவு 7பி(1)ன்படியான, துணை பிரிவு (2)ல் உள்ளவை தவிர, அனைத்து உரிமைகளும் வெளிநாட்டு இந்திய குடிமகன் உரிமை பெற்றுள்ளவருக்கு உண்டு. சட்டத்தின் பிரிவு 7பி(2)ல் இந்திய அரசியலமைப்பின் 16வது பிரிவு குறிப்பிடப்பட்டுள்ளபோதிலும், 14 மற்றும் 19ம் பிரிவுகள் சேர்க்கப்படவில்லை.
ஆகவே 14ம் பிரிவின்படியான சட்டத்தின் முன் சமம் மற்றும் பிரிவு 19ன்படி இந்திய குடிமகனுக்கு உறுதி செய்யப்பட்டுள்ள பேச்சு மற்றும் எழுத்து சுதந்திரம் வெளிநாட்டு இந்திய குடிமகனுக்கும் பொருந்தும் என்று நீதிபதி விபு பக்ரு கூறியுள்ளார்.