கர்நாடகா அணைகளில் இருந்து 1.70 ஆயிரம் கனஅடி நீர் நீர் திறப்பு..

Aug 15, 2018, 07:52 AM IST
கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு ஒரு லட்சத்து 70 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. 
கர்நாடகாவில் பருவமழை தொடங்கியது முதல் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதி மாவட்டங்களான குடகு, ஹாசன், சிக்கமகளூரு, மண்டியா, மைசூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. ஏற்கனவே இந்த பகுதியில் உள்ள ஹேமாவதி, ஹாரங்கி, கபினி, கேஆர்எஸ் ஆகிய அணைகள் முழுவதுமாக நிரம்பி விட்டன. 
 
கடந்த 15 நாட்களுக்கு முன்பே இந்த அணைகள் நிரம்பிய நிலையில் அணைக்கு வரும் நீர் முழுவதுமாக தமிழகத்திற்கு செல்லும் காவிரி கால்வாயில் திறந்து விடப்பட்டு வருகிறது. ஏற்கனவே அதிகபட்சமாக ஒரு லட்சத்து 45 ஆயிரம் கனஅடி வரை தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு இருந்தது இந்த ஆண்டின் அதிகபட்ச நீர் திறப்பாக இருந்தது. 
 
இந்நிலையில் கேரளாவின் வயநாடு, கர்நாடகாவின் குடகு சிக்கமகளூரு ஆகிய பகுதிகளில் கடந்த மூன்று தினங்களாக கனமழை விடாது பெய்து வருவதால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளது. ஏற்கனவே குடகு மாவட்டத்தில் உள்ள ஹாரங்கி அணையில் இருந்து 45 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் கபினி மற்றும் கேஆர்எஸ் அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 
 
கேஆர்எஸ் அணையின் நீர்வரத்து தற்போது ஒரு லட்சத்து 8 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையின் பாதுகாப்பு கருதி அணையில் இருந்து வினாடிக்கு ஒரு லட்சத்து 20 ஆயிரம் கன அடி தண்ணீர் காவிரி கால்வாயில் திறக்கப்படுகிறது. 
 
இதேபோல கபினி அணையில் இருந்து 50 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. ஒட்டுமொத்தமாக இந்த இரண்டு அணைகளில் இருந்தும் தற்போது ஒரு லட்சத்து 70 ஆயிரம் கனஅடி தண்ணீர் தமிழகத்திற்கு வந்து கொண்டிருக்கிறது. 
இது கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நீர் திறப்பானது பதிவாகியுள்ளது. இறுதியாக கடந்த 2007-ம் ஆண்டு அக்டோபர் 6ஆம் தேதி கபினி மற்றும் கேஆர்எஸ் அணைகளில் இருந்து ஒரு லட்சத்து 53 ஆயிரம் கன அடி தண்ணீர் தமிழகத்திற்கு திறக்கப்பட்டது. அதன் பின்னர் தற்போது தான் அதிகளவு தண்ணீர் தமிழகத்திற்கு திறக்கப்பட்டுள்ளது. 
 
இதனை தொடர்ந்து, காவிரி கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி மத்திய நீர் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், நாகை ஆகிய மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
 
இதுபோன்ற அதிகப்படியான நீர் திறக்கப்பட்டபோதிலும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நீரை சேமிக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் காவிரிடெல்டா மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

You'r reading கர்நாடகா அணைகளில் இருந்து 1.70 ஆயிரம் கனஅடி நீர் நீர் திறப்பு.. Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை