கனமழை எச்சரிக்கை.. 5 மாவட்ட ஆட்சியருக்கு ஆணை

Aug 15, 2018, 23:04 PM IST
கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து, கர்நாடகாவின் 5 மாவட்ட ஆட்சியர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட முதலமைச்சர் குமாரசாமி ஆணையிட்டுள்ளார். 
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளான குடகு, ஹாசன், தட்சிண கன்னடா, சிக்கமகளூரு, சிவமொக்கா ஆகிய மாவட்டங்களில் கனமழை நீடித்து வருகிறது. அனைத்து அணைகளும் நிரம்பிய நிலையில், மழையின் தாக்கம் குறையாது இருப்பதால் அந்த மாவட்டங்களில் அசாதாரண சூழல் நிலவி வருகிறது. 
 
தொடர் மழை காரணமாக, பெங்களூருவில் இருந்து கேரள மாநிலம் கண்ணூர், கோழிக்கோடு, காசர்கோடு பகுதிகளுக்கு பேருந்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது. மங்களூரு உள்ளிட்ட இடங்களுக்கு மாற்று வழித்தடத்தில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 
 
நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருப்பதால் கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளில் இருந்து 2 லட்சம் கனஅடி நீர் தமிழகத்திற்கு திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கரையோர வசிக்கும் 40க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
 
அதேபோல் சேலம், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் காவிரி கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், காவிரி, கொள்ளிடம் ஆறுகளின் கரையோர மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறும், ஆற்றை கடக்க வேண்டாம் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
 
மக்கள் மற்றும் வாகனங்கள் செல்லும் உயர்மட்ட பாலங்கள் தவிர ஆற்றின் குறுக்கே செல்லும் பாதைகளை அடையாளம் காண்பதற்கு தரைமட்ட பாலங்களிலும் எச்சரிக்கை பதாகைகள் அமைக்க உள்ளாட்சி அமைப்புகள் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
 
பொதுமக்கள் மத்தியில் எந்தவித பீதியும் ஏற்படக் கூடாது என்பதையும், பாதிப்புக்குள்ளாகும் மக்களைப் பாதுகாப்பாக வெளியேற்றி நிவாரண முகாம்களில் தங்க வைத்திடவும் மாவட்ட ஆட்சியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நீர்நிலைகளில் யாரும் செல்ஃபி எடுக்கக் கூடாது என மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

You'r reading கனமழை எச்சரிக்கை.. 5 மாவட்ட ஆட்சியருக்கு ஆணை Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை