2017-ஆம் ஆண்டின் மறக்க முடியாத சம்பவங்கள்..! பகுதி - 1

by Suresh, Dec 20, 2017, 23:59 PM IST

திரும்பி வராத தேசத்திற்கு செல்ல தயாராகி விட்டது... 2017. இந்த வருடத்தின் மறக்க முடியாத சம்பவங்களை கொஞ்சம் அசைபோடுவோமா மக்களே.!

2017 இதோ முடியப் போகிறது...

மருத்துவர்களால் கைவிடப்பட்ட ஒரு முதிர்வயது நோயாளியின் கடைசி நாட்களைப் போல, இன்னும் சில நாட்களில் 2017 இயற்கை எய்திவிடும். "செலவு வைக்காம சீக்கிரம் போய் சேர்ந்தா நல்லா இருக்கும்" என இறைவனை வேண்டும் அன்பு உறவினராய் நாம் நிற்கும் அதே வேளையில்.... பிறக்கப்போகும் 2018-ஐ காண, ஆப்ரேஷன் தியேட்டர் வாசலில் காத்திருக்கும் ஆர்வமிகு தந்தையாகவும் மாறியிருப்போம்,

மாற்றம் ஒன்றே மாறாதது...

மாற்றங்களுக்கு தயாராவதற்கு முன் முடிந்துபோன விஷயங்களை சற்று திரும்பி பார்த்து பெருமூச்சி விடவேண்டியதும் அவசியமல்லவா, அப்படி நம்மை அந்த நேரத்தில் மூச்சு தினற வைத்த, கோபப்பட வைத்த, ரசிக்க வைத்த, சிரிக்க வைத்த, அழ வைத்த சில சம்பவங்களை அசை போடுவோமா மக்களே...

Jallikattu

ஜனவரி :-

ஜல்லிக்கட்டு போராட்டத்தோடு துவங்கியது 2017, "தமிழ் நாட்டின் பாரம்பரியம் ஜல்லிக்கட்டு, அதை வெளிநாட்டு நிறுவனம் எப்படி தடை செய்யலாம்" என்று சொல்லி இளைஞர்கள் சமூக வளைதளங்கள் மூலமாக ஒருங்கிணைந்து, மிகப்பெரிய அளவில், கிட்டத்தட்ட தமிழ்நாடு முழுக்க ஸ்தம்பிக்க வைத்த போராட்டம் ஜல்லிக்கட்டு போராட்டம்.
அலங்காநல்லூர், சென்னை மெரினா கடற்கரை, மதுரை தமுக்கம் மைதானம், கோவை வ. உ. சி மைதானம், திண்டுக்கல், திருச்சி, சேலம், திருநெல்வேலி வ.உ.சி மைதானம், வேலூர் புதுச்சேரி ஆகியவை முக்கியப் போராட்டக் களங்களாக அமைந்தன. முதல் ஏழு நாட்கள் அறவழியில் நடந்துவந்த போராட்டங்கள், எட்டாவது நாளில் காவல்துறையின் வன்முறையுடன் நிறைவுக்கு வந்தது. இதில் எந்த அரசியல் கட்சியையும் உள்ளே வர அனுமதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பிப்ரவரி:-

பிப்ரவரி மாதம் ஐந்தாம் தேதி நடந்த சட்டமன்றக் கூட்டத்தில் சசிகலா அதிமுகவின் சட்டமன்ற கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து தமிழகத்தின் முதல்வர் ஆகப்போகிறார் என்ற செய்தியும் வெளியானது. அந்த தகவலுக்கு வலுவூட்டும் விதத்தில் பன்னீர் செல்லவம் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார்.

தியானம்:-

இந்நிலையில் திடீரென பிப்ரவரி எட்டாம் தேதி சென்னை மெரினா கடற்கரையில் இருக்கும் ஜெயலலிதா சமாதிக்கு வந்த ஒ.பி.எஸ் தியானத்தில் ஆழ்ந்தார். சுமார் நாற்பது நிமிடங்கள் வரை நீடித்த அந்த தியானம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் பிறகு, பத்திரிக்கையாளர்களை சந்தித்த ஒ.பி.எஸ் தன்னை கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்யச் சொன்னதாக பேட்டியளித்தார், அந்த நாளில் நடந்த சம்பவத்தால், அவர் மீது தமிழக மக்கள் மனதில் ஒரு அனுதாப அலை எழுந்தது, அதன்பிறகு ஒ.பி.எஸ் அ.தி.மு.க.,வில் இருந்து வெளியேறினார்.

கூவத்தூர்:-

அதிமுக என்ற கட்சி இரண்டாக உடைந்தது. எங்கே எம்.எல்.ஏ.,க்கள் எல்லாம் ஒ.பி.எஸ் பக்கம் சென்று விடுவார்களோ என்று நினைத்து எம்.எல்.ஏ.,க்கள் கூவத்தூர் ரிசார்ட்டில் அடைத்து வைக்கப்பட்டனர். சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு வெளியாகி சசிகலா குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டது. அவர், பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார்.

Sasikala

மார்ச்:-

இந்த மாதத்தில் ரசிகர்கள் எல்லோரும் குறிப்பிட்ட ஒருவரின் ட்விட்டர் வீடியோவுக்காக காத்திருந்தார்கள். பிரபல பின்னணிப் பாடகி சுசித்ரா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பல நடிகர், நடிகைகளின் அந்தரங்க படங்களை வெளியிட்டு சர்ச்சையை கிளப்பினார். சுச்சீ லீக்ஸ் என பயங்கர வைரலாக அது பரவியது. சுசித்ராவின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டது என்றும், அவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டிருந்தார் என்றும் அப்போது சொல்லப்பட்டது.

ஏப்ரல்:-

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் இருக்கிற வைகை அணையிலுள்ள நீரானது, மதுரை மற்றும் தேனி மாவட்டங்களின் கூட்டுகுடிநீர் திட்டங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. இந்த வருடம் பருவ மழை பொய்த்துப் போனதால் கடும் வறட்சி நிலவியது. மேலும், தொடர்ந்து தண்ணீர் ஆவியாகிக் கொண்டே இருந்தது. கடந்த ஆண்டு இதே நேரத்தில் 35 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் 2017 ஏப்ரலில் 23 அடியாக குறைந்தது, இதனால் தண்ணீரை ஆவியாகாமல் தடுக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்த விஷயம் உலகையே ஆண்டிப்பட்டி பக்கம் திரும்பி பார்க்க வைத்தது.

தெர்மாக்கோல் அமைச்சர்:-

கரையிலிருந்து 200 மீட்டர் வரையில் உள்ள நீரில், தெர்மாகோல் அட்டைகளை மிதக்கவிட்டனர். அதை விட்ட பத்தே வினாடிகளில் காற்றின் வேகம் காரணமாக அடித்து வரப்பட்டு அனைத்தும் கரை ஒதுங்கியது. இந்த வீடியோ அப்படியே செய்தியாக வெளியாகி, சமூக வலைதளங்களில் பயங்கர வைரலாக பரவியது.

தெர்மாகோல்

பாகுபாலி 2

இதே மாதம் ஏப்ரல் 28 ஆம் தேதி 2015 ஆம் ஆண்டு வெளியான பாகுபலி திரைப்படத்தின் இரண்டாம் பகுதி வெளியானது. இந்தியாவில் மிகவும் அதிகமான செலவில் தயாரிக்கப்பட்ட பாகுபலி திரைப்படம் வெளியிடப்படுவதற்கு முன்பே ஐந்து பில்லியனுக்கு விற்பனையானது. உலகளவில் பெரும் வசூல் வேட்டையை நடத்தியது. மே மாதம் இதுவரை இல்லாத அளவிற்கு ஆயிரத்து ஐநூறு கோடி வசூல் சாதனை புரிந்தது.

ஜூன்:-

பெரும் சர்ச்சைகளும், எதிர்ப்பார்ப்புகளையும், விமர்சனங்களை தாங்கிக் கொண்டு இந்த மாத இறுதியில் ஒளிபரப்பான டிவி நிகழ்ச்சி பிக் பாஸ். கமல்ஹாசன் தொகுத்து வழங்கப்போகிறார் என்பதே மிகப்பெரிய விஷயமாக பார்க்கப்பட்ட நிலையில், இதுவரை தமிழில் அறிமுகமில்லாத, நூறு நாட்கள் ஒரே வீட்டில் இருக்க வேண்டும், வெளியுலக தொடர்பு இருக்காது, சுற்றிலும் கேமரா கண்காணிக்கும் என்று பயங்கர எதிர்ப்பார்ப்புகளுடன் வெளியானது.

ஓவியா ஆர்மி:-

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் அதில் கலந்து கொண்டவர்கள் எல்லாம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்கள், அவர்கள் வீட்டிற்குள்ளே பேசுகிற வசனங்கள் ஒவ்வொன்றும் இங்கே சோசியல் மீடியாவில் ட்ரெண்ட் ஆனது. வெளியே ஓவியாவிற்கென பெரும் ரசிகர் பட்டாளமே உருவானது. எக்கச்சக்கமான மீம்ஸ்கள் பறந்தன. முதலில் மக்களால் அன்புத்தங்கையாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஜூலி, இறுதியில் வில்லியாக புறக்கணிக்கப் பட்டார், "தமிழர்கள் எளிதில் உணர்ச்சி வசப்படக் கூடியவர்கள்" என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டாகியது.

தொடரும்...

You'r reading 2017-ஆம் ஆண்டின் மறக்க முடியாத சம்பவங்கள்..! பகுதி - 1 Originally posted on The Subeditor Tamil

More India News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை