கெஜ்ரிவால் மனசுல யாரு - டுவிட்டர் சொல்கிறதா?

கெஜ்ரிவால் மனசுல யாரு

Aug 25, 2018, 00:22 AM IST
சமூக ஊடகமான டுவிட்டரில் தீவிரமாக இயங்கி வருபவர் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால். பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கு அடுத்தபடியாக, கெஜ்ரிவாலை 1,40,000 பேர் பின்தொடர்கிறார்கள்.
 
 
கெஜ்ரிவால் அவரது சமூக ஊடக குழுவினர் கொடுக்கும் தகவல்களின்பேரில் டுவிட்டர் கணக்கில் அவரே பதிவிடுகிறாராம். பெரும்பாலும் அவரது டுவிட்டர் பதிவுகள் டெல்லி அரசின் பணிகள் மற்றும் பிஜேபி, பிரதமர் நரேந்திர மோடி பற்றியவையாகவே இருக்கும்.
 
கெஜ்ரிவாலின் டுவிட்டர் பதிவுகள் பற்றி வேறொரு கணிப்பும் கூறப்படுகிறது. யாருடைய பதிவுகளை அவர் மீள்பதிவு செய்கிறார் என்பதை பொறுத்து, கெஜ்ரிவாலின் மனதில் அவர்கள் எந்த இடத்தில் இருக்கிறார்கள் என்று கணிக்க முடியும் என்று கூறுகிறார்கள்.
 
கெஜ்ரிவாலின் உற்ற நண்பர்களான அசுதோஷூம், ஆசிஷ் கேட்டனும் ஆம் ஆத்மி கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர். இவர்கள் ராஜினாமாவை ஏற்றுக்கொண்டதாக கெஜ்ரிவால் இன்னும் அறிவிக்கவில்லை. பத்திரிகையாளர்களான இவர்கள் இருவரும் கெஜ்ரிவால் கட்சியின் மூலம் அரசியலுக்கு வந்தவர்கள். கட்சியிலிருந்து  விலகும்  முடிவை அறிவிப்பதற்கு சில மாதங்கள் முன்பே கெஜ்ரிவால் தம் மனதிலிருந்து அவர்களை விலக்கி விட்டார் என்று டுவிட்டர் பதிவுகள் கணிப்பு மூலம் கூறப்படுகிறது.
 
கடந்த ஜூன் 18 முதல் ஆகஸ்ட் 15 வரையிலான கால கட்ட டுவிட்டர் செயல்பாடுகளை கொண்டு கணிப்பவர்கள், துணை முதலமைச்சர் மணிஷ் சோடியாவின் டுவிட்களை கெஜ்ரிவால் 31 முறை ரீடுவிட் செய்துள்ளார் என்று கூறுகின்றனர். செய்தி தொடர்பாளர் சௌரப் பரத்வாஜின் டுவிட்களை 19 முறையும்,  பத்திரிகையாளர்களின் பதிவை 80 முறையும், மற்ற கட்சி தலைவர்களின் பதிவை 11 முறையும் மீள்பதிவு செய்துள்ளார். இக்குறிப்பிட்ட காலகட்டத்தில் அசுதோஷின் பதிவுகளை இரு முறையும், கேட்டனின் பதிவுகளை மூன்று முறையும் மட்டுமே மீள்பதிவு செய்துள்ளார். இதற்கு முன்னுதாரணமாக கெஜ்ரிவாலிடமிருந்து குமார் விஸ்வாஸ் விலகுவதற்கு முன்பு, கெஜ்ரிவால் அவரது பதிவுகளை மீள்பதிவு செய்வது குறைந்தது என்றும் கூறப்படுகிறது.
 
ஆம் ஆத்மி சார்பில் மாநிலங்களவைக்கு சுஷில் குப்தா என்ற தொழிலதிபரையும், என்.டி. குப்தா என்ற ஆடிட்டரையும் தேர்ந்தெடுத்ததோடு, 2019 மக்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுப்பது பற்றியும் அதிருப்தி நிலவுவதாக கூறப்படுகிறது. 2014 மக்களவை தேர்தலில் அசுதோஷ், சாந்தினி சௌக் தொகுதியிலும், ஆசிஷ் கேட்டன், புது டெல்லி தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
தேர்தல் என்னும் யானை வருவதற்கு முன்பே மணி(டுவிட்டர்)யோசை கேட்க ஆரம்பித்து விட்டது!

You'r reading கெஜ்ரிவால் மனசுல யாரு - டுவிட்டர் சொல்கிறதா? Originally posted on The Subeditor Tamil

More India News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை