இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் 18வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய வீரர் மற்றும் வீராங்கனைகள் பதக்கங்களை வென்று வருகின்றனர். ஆறாம் நாளான இன்று டென்னிஸ் மற்றும் துடுப்புப் படகு போட்டிகளில் இந்தியா குறிப்பிடத்தக்க வகையில் வெற்றிகளை பெற்றுள்ளது.
ரோஹன் போபண்ணா மற்றும் டிவிஜ் சரண் ஆசிய போட்டிகளில் முதன்முறையாக இந்தியாவுக்கென ஆண்கள் இரட்டையர் டென்னிஸ் விளையாட்டில் தங்கம் வென்றுள்ளனர். கஸகஸ்தானின் அலெக்ஸாண்டர் பப்லிக், டெனிஸ் யெவ்சேயெவ் இணையை இறுதிப் போட்டியில் இந்திய இணை வென்றது.
தங்கத்தை தவற விட்ட நங்கைகள் 18வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய பெண்கள் கபடி அணி, ஈரானிடம் தோல்வியுற்றது. 2010 மற்றும் 2014 ஆசிய போட்டிகளில் தங்கம் வென்ற இந்திய மகளிர் அணி இந்த முறை ஈரான் மகளிர் அணியிடம் 24 - 27 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றியை இழந்ததால், வெள்ளிப் பதக்கத்தையே பெற முடிந்தது. தொடர்ந்து மூன்று ஆசிய போட்டிகளில் தங்கம் வெல்லும் வாய்ப்பை மகளிர் அணி தவற விட்டது.குறி தவறாமல் சுட்ட பெண் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவு துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவின் ஹீனா சித்து வெண்கலம் வென்றுள்ளார்.
ஏலேலோ... ஐலேசா... துடுப்புப் படகு இலகுரக ஆண்கள் ஒற்றையர் துடுப்புப் படகு போட்டியில் துஷ்யந்த்தும், இலகு ரக இரட்டையர் துடுப்புப் படகுப் போட்டியில் ரோஹித்குமார், பாக்வன் சிங் ஆகியோரும் வெண்கலம் வென்றனர். சாவ்ரன் சிங், டட்டு போகானல், ஓம் பிரகாஷ் மற்றும் சுக்மீத் சிங் ஆகியோர் அடங்கிய அணி துடுப்புப் படகு போட்டியில் தங்கம் வென்றுள்ளது.பிரிவு 'ஏ' போட்டியில் இந்திய ஹாக்கி அணி. ஜப்பானை 9 - 0 என்ற கோல் கணக்கில் அசத்தலாக வென்றுள்ளது.
ஆறு தங்கப் பதக்கம், ஐந்து வெள்ளி மற்றும் பதினான்கு வெண்கல பதக்கங்களுடன் இந்தியா பதக்கப் பட்டியலில் எட்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.