கர்நாடகா உள்ளாட்சி தேர்தலையொட்டி, வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட காங்கிரஸ் வேட்பாளரை ஒரு பெண்மணி செருப்பால் அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலத்தின் உள்ளாட்சி தேர்தல் இரு கட்டங்களாக நடத்தப்பட உள்ளது. முதல்கட்டமாக வருகிற 29ஆம் தேதி 105 மாமன்ற, நகர சபை மற்றும் நகர பஞ்சாயத்துக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வாக்குசேகரிப்பில் பல்வேறு கட்சி வேட்பாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
கொப்பள் மாவட்ட குஷ்டகி நகர சபையின் 20-வது வார்டில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் தம்மண்ணா டோ லின், தமக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அந்த வார்டில் வசிக்கும் ஒரு பெண்மணி, ஏற்கனவே, நகர் மன்ற தேர்தலில் வெற்றி பெற்று மக்களை மோசம் செய்தது போதாதா எனக் கூறி காங்கிரஸ் வேட்பாளருடன் வாக்குவாதம் செய்தார்.
ஒரு கட்டத்தில் காங்கிரஸ் வேட்பாளரை, அனைவர் முன்னிலையிலும் செருப்பால் அடித்து விரட்டினார். இந்த மொத்த காட்சிகளையும் அப்பகுதியை சேர்ந்த ஒருவர் தனது செல்போனில் படம் பிடித்துள்ளார்.
இந்தக் காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. ஆனால் தற்போது வரை வேட்பாளர் போலீசில் எந்த புகாரும் அளிக்கவில்லை.