மஹாராஷ்டிர மாநிலத்தில் வெளிநாடு வாழ் இந்தியருக்காக ஒதுக்கப்பட்டிருந்த 225 மருத்துவ படிப்பு இடங்களுள் 217 இடங்கள் நிரப்பப்படவில்லை.
மருத்துவ படிப்பில் சேருவதற்கு மக்கள் அலைமோதுகின்றனர். மாணவ மாணவியர் மட்டுமல்ல, பெரும்பாலான பெற்றோருக்கு பிள்ளைகள் மருத்துவம் படிப்பது கௌரவத்துக்குரிய ஒன்றாக தெரிகிறது.
இந்தியா முழுவதும் உள்ள ஏறக்குறைய 66,000 மருத்துவம் மற்றும் பல் மருத்துவ பட்டப்படிப்பு இடங்களில் சேருவதற்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வினை (National Eligibility-cum-Entrance Test - NEET) இந்த ஆண்டு 13 லட்சம் மாணவ மாணவியர் எழுதினர். இந்நிலையில் மஹாராஷ்டிராவில் மூன்று கட்ட மாணவர் சேர்க்கை முடிந்த நிலையில் வெளிநாடு வாழ் இந்தியருக்கான இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.
மஹாராஷ்டிராவில் அரசு மருத்துவ கல்லூரிகளில் 3,000 இடங்களும் தனியார் கல்லூரிகளில் 1,500 மருத்துவ பட்டப்படிப்பு இடங்களும் உள்ளன. அவற்றுள் 225 இடங்கள் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மஹாராஷ்டிரா பொது நுழைவுத் தேர்வு மையம் வெளியிட்டுள்ள தகவல்படி, மொத்தத்தில் காலியாக உள்ள 248 இடங்களில் 243 இடங்கள் தனியார் கல்லூரிகளில் உள்ளன என்று தெரிய வருகிறது.
மொத்த இடங்களுள் 15 சதவீதம் வெளிநாடு வாழ் இந்தியருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அவற்றுள் பல இடங்கள் நிரம்பாமல் போனதற்கு தனியார் கல்லூரிகள் அதிக கட்டணம் வசூலிப்பதே காரணமாகும் என்று மஹாராஷ்டிர மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநரகத்தின் (Directorate of Medical Education and Research - DMER) இயக்குநர் டாக்டர் பிரவீண் சிங்காரே தெரிவித்துள்ளார். பல் மருத்துவப் படிப்புக்கான இடங்கள் பற்றிய விவரங்கள் இன்னும் தெரிய வரவில்லை.
என்ஆர்ஐ ஒதுக்கீட்டுக்கான இடங்களை நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களாக மாற்றி ஆகஸ்ட் 27ம் தேதி அவற்றுக்கு விண்ணப்பங்களை வரவேற்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் அந்த இடங்கள் நிரப்பப்பட்டு விட்டன என்று பூனாவில் இயங்கும் மருத்துவ கல்லூரி ஒன்றின் டீன் கூறியுள்ளார்.
வெளிநாடு வாழ் இந்தியருக்கான இடங்கள் நிர்வாக இடங்களாக பொதுப் பிரிவுக்கு மாற்றப்பட்டதுடன், வழக்கமான கட்டணத்தைப் போல் ஐந்து மடங்காக இருந்த கட்டணம் மூன்று மடங்காக குறைக்கப்பட்டது மாணவர்களுக்கு நல்லது என்பது ஒரு பக்கம் இருந்தாலும், கடந்த இரண்டு மாதங்களாக சீந்துவார் இல்லாமல் இருந்த இடங்களுக்கு தனியார் மருத்துவ கல்லூரிகள் எப்படி திடீரென மாணவர்களை கண்டுபிடித்தார்கள் என்பது மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநரகத்துக்கு தெரியவில்லை.
"ஒதுக்கீட்டு இடங்கள் தகுதியான மாணவர்களுக்கு கிடைக்கிறதா என்பதை உறுதி செய்ய சரியான நடைமுறை வேண்டும்," என்று மாணவர் ஒருவரின் பெற்றோர் தெரிவித்துள்ளார்.