மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்துக்கு தமிழகத்தின் ஒப்புதலை பெற தேவையில்லை என்று கர்நாடக மாநில நீர்வளத்துறை அமைச்சர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
மேகதாதுவில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்ட கர்நாடகாவுக்கு அனுமதி அளிக்கக்கூடாது என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியிருந்தார்.
இது குறித்து டி.கே.சிவக்குமார் செய்தியாளர்கனிடம், “காவிரி நீர் வீணாக கடலில் கலப்பதை தவிர்ப்பதற்காகவே, மேகதாதுவில் அணை கட்ட விரும்புகிறோம்.
இதற்காக மத்திய நீர் ஆணையத்தை முறைப்படி அணுகி இருக்கிறோம். இதில் நீர் ஆணையம்தான் இறுதி முடிவு எடுக்க வேண்டும். இதற்கு தமிழகத்தின் ஒப்புதலை பெற வேண்டிய அவசியம் இல்லை.
உச்ச நீதிமன்றம், நடுவர் மன்றம் ஆகியவற்றின் உத்தரவை நாங்கள் மீறவில்லை. தன்னிச்சையாக செயல்படவில்லை. மேகதாதுவில் அணை கட்டினாலும், தமிழகத்துக்கான தண்ணீர் குறைக்கப்படாது.
தமிழகத்துடன் இந்த விவகாரம் தொடர்பாக சண்டையிட விரும்பவில்லை. நட்புறவையே விரும்புகிறோம். தமிழகத்தின் கவலைகளை தீர்ப்பதற்குத் தயாராக இருக்கிறோம். இதற்கான சந்திப்புக்கு ஏற்பாடு செய்யும்படி, தமிழக அரசிடம் கூறி இருக்கிறோம்” என்று கூறியுள்ளார்.