பாலியல் பலாத்கார வழக்குகளில் ஆஜராகாததால் நித்யானந்தாவுக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து ராமநகர் மாவட்ட நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
கர்நாடக மாநிலம் ராமநகர் மாவட்டத்தில் ஆசிரமம் நடத்தி வரும் நித்யானந்தா மீது பெண் சீடர் ஆர்த்திராவ் என்பவர் பாலியல் பலாத்கார வழக்கு தொடர்ந்தார். இதேபோல், கொலை மிரட்ட போன்று 8 வழக்குகளின் கீழ் நித்யானந்தாவிடம் சிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆனால், நித்யானந்தா தன் மீதான வழக்குகளை ரத்து செய்யக்கோரி கர்நாடக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும், வழக்குகளை விசாரிக்க ராமநகர் மாவட்ட நீதிமன்றத்துக்கு கர்நாடக நீதிமன்றம் உத்தரவிட்டது.
ராமநகர் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு மீதான விசாரணையின்போது நித்யானந்தா நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. இதன் பிறகும், நேரில் ஆஜராகும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், நித்யானந்தா நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்று நேரில் ஆஜராகவில்லை.
இந்நிலையில், இந்த வழக்கு மீதான விசாரணை நேற்று ராமநகர் மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி கோபால கிருஷ்ணராய் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, நித்யானந்தா வடமாநிலங்களில் ஆன்மிக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளதால் அவரால் விசாரணைக்கு ஆஜராக முடியவில்லை என்று நித்யானந்தா சார்பில் ஆஜரான வக்கீல் தெரிவித்தார்.
இதனை ஏற்க மறுத்த நீதிபதி, நித்யானந்தாவுக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து அதிரடியாக உத்தரவிட்டார். இதனால், எந்நேரத்திலும் நித்யானந்தா போலீசாரால் கைது செய்யப்படுவார் என்று தெரிகிறது.